தமிழ் சினிமா

ஆயிரக்கணக்கான நடிகர்களுக்கு கமல் சார் தான் உத்வேகம்: விக்ரம் புகழாரம்

ஸ்கிரீனன்

ஆயிரக்கணக்கான நடிகர்களுக்கு கமல் சார் தான் உத்வேகம் என்று 'கடாரம் கொண்டான்' ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விக்ரம் புகழாரம் சூட்டினார்.

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அபி, அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கடாரம் கொண்டான்'. ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் கமலும் கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார். இந்த விழாவில் விக்ரம் பேசும் போது, “ஏற்காட்டில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒவ்வொரு புதன்கிழமையும் ஆங்கிலப்  படங்கள் போடுவார்கள். தமிழ் அல்லது இந்திப் படங்கள் தேசிய விடுமுறை நாட்களில் எப்போதாவது போடுவார்கள். எங்களுக்கென்று விடுமுறை நாட்கள் இருக்கும். அந்த நாளில் எந்தப் படம் வேண்டுமானாலும் வாங்கிவிட்டு வந்து போட்டுக் கொள்ளலாம். அப்படி எங்களது அணி போகும் போது 'வாழ்வே மாயம்' வாங்கி வந்தோம். மற்ற அணிகள் போகும் போது  'வறுமையின் நிறம் சிவப்பு', 'டிக்:டிக்:டிக்'  என வாங்கி வந்தார்கள். இத்தனைக்கும் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டதில்லை. எங்களுக்குள்ளேயே எந்தப் படம் சிறந்தது என்ற போட்டி நடந்தது. என்னை மாதிரி ஆயிரக்கணக்கான நடிகர்களுக்கு கமல் சார் தான் உத்வேகம். அதற்கு மிகப்பெரிய நன்றி.

எனக்கு நிறைய நடிகர்களைப் பிடிக்கும். கமல் சார், சிவாஜி சார் படங்கள் எல்லாம் பார்த்து தான் எனக்குள் ஒரு ஃபயர் வந்திருக்கும். அவருடைய அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறேன். 'நாயகன்', 'வறுமையின் நிறம் சிவப்பு' என எனக்குப் பிடித்த படங்கள் குறித்து ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. ஆனால், எனக்கு ரொம்பப் பிடித்த படம் '16 வயதினிலே'.

ரீமேக் பண்ணனும் என்றால் என்ற கேள்வி வரும் போது '16 வயதினிலே' சப்பாணி கேரக்டர்  பண்ணனும் என்று சொல்வேன். ஆனால், என்னால் அதைச் சரியாகப் பண்ண முடியாது என்பது தெரியும். அந்த இளம் வயதில் கூட ரொம்ப மெச்சூரிட்டியுடன் நடித்திருப்பார். உலக அளவில் கமல் சாருடைய பணியைப் பாராட்டுகிறார்கள்.

'கடாரம் கொண்டான்' படத்தில் நடித்ததற்கு ஒரே காரணம் கமல் சார். போன் வந்தவுடனே பண்ணிவிடுகிறேன் என்று தான் சொன்னேன். கதையைக் கேட்டவுடன், வித்தியாசமாக இருக்கிறது. உலகத்தரத்தில் நமது கலாச்சாரம் மிஸ் ஆகாமல், ரொம்ப ஸ்டைலிஷான படத்தை ராஜேஷ் கொடுத்திருக்கார்.

நிறைய வித்தியசாமான, கடினமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால், இந்த கேரக்டரில் ஒரு ஈர்ப்பு இருந்தது. 'துருவ நட்சத்திரம்' படத்தில் நான் ஸ்டைலாக இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், 'கடாரம் கொண்டான்' படத்தில் வேறொரு ஸ்டைலில் வித்தியாசமாக இருப்பேன்.

அபி இந்தப் படத்தில் இன்னொரு நாயகன் தான். நாசர் சாருடைய மகன் என் படத்தின் மூலம் திரையுலகிற்கு வருவதில் சந்தோஷம். ரொம்ப வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் பண்ணியிருக்கார். இந்தப் படத்தில் எங்கள் இருவருக்குள் தான் ஒரு போட்டி மாதிரி இருந்துகொண்டே இருக்கும். ரொம்ப வேகமாக நகரும் கதை, சண்டைக் காட்சிகள் என போகும் போது அதில் இருக்கும் ஒரு பூ போல இந்தப் படத்தில் அக்‌ஷரா ஹாசன். பின்னணி இசையை ஜிப்ரான் அருமையாக கொடுத்திருந்தார். இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் சண்டைக் காட்சிகள் ஒரு ஹாலிவுட் படத்துக்கு பண்ணுவது போல் செய்திருக்கிறோம்.

இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா ரொம்ப திறமையான இயக்குநர். அவரது பணித்திறன் எனக்குப் பிடித்திருந்தது. இந்தப் படம் எனக்கு ஒரு மைல்கல்லாக அமையும் என நினைக்கிறேன்” என்று பேசினார் விக்ரம்.

SCROLL FOR NEXT