அமலா பால் நடித்துள்ள ‘ஆடை’ படம், ஜூலை 19-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மேயாத மான்’ படத்தைத் தொடர்ந்து ரத்னகுமார் இயக்கியுள்ள படம் ‘ஆடை’. ஹீரோயினை மையப்படுத்திய இந்தக் கதையில், பிரதான பாத்திரத்தில் அமலா பால் நடித்துள்ளார். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.
படம் நேரடி ஒலிப்பதிவு என்பதால், இந்தப் படத்தில் டப்பிங் பணிகள் கிடையாது. இதனால், இறுதிக்கட்டப் பணிகள் விரைவாக முடிவடைந்தன. இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
பெண் ஒருவர் ஆடையில்லாமல், ஒரு இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், அடுத்த மாதம் (ஜூலை) 19-ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘அதோ அந்த பறவை போல’ என்ற தமிழ்ப் படத்திலும், ‘ஆடு ஜீவிதம்’ என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார் அமலா பால்.