தமிழ் சினிமா

தீபிகா படுகோன் என் ரோல் மாடல்: நடிகை சோனம் பாஜ்வா

மகராசன் மோகன்

பூனம் பாஜ்வாவை தொடர்ந்து தற்போது கோலிவுட்டை குறிவைத்து வட இந்தியாவில் இருந்து களம் இறங்கியிருக்கிறார் சோனம் பாஜ்வா. ஷங்கரின் ‘எஸ் பிக்சர்ஸ்’ வெளியிடும் ‘கப்பல்’ படத்தில் நாயகியாக நடிக்கும் இவர் பஞ்சாபி மொழியில் ‘பெஸ்ட் ஆஃப் லக்’, ‘பஞ்சாப் 1984’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்து பட்டையைக் கிளப்பியவர். படப்பிடிப்புக்காக சென்னை வந்த இவரைச் சந்தித்தோம்.

‘கப்பல்’ பட அனுபவம் எப்படி இருக்கிறது?

ரொம்பவே உற்சாகமாக இருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் வைபவ், கருணா, விடிவி கணேஷ், அர்ஜூ னன் எல்லோரும் படு சுட்டிகள். படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் காமெடியாக இருக்கும். எனக்கு கொஞ் சம் மொழிப் பிரச்சினை இருந்தாலும் மற்றவர்களின் உதவியால் அதைச் சமாளித்தேன். படப்பிடிப்பின் கடைசி நாள் வரை சந்தோஷமாக இருந்தேன்.

பஞ்சாபி பெண்ணான உங்களுக்கு தமிழ்ப் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது?

என் அம்மா பஞ்சாபி. நான் பிறந்தது உத்தரப்பிரதேசத்தில். கல்லூரி வாழ்க்கை புதுடெல்லியில் நகர்ந்தது. படிப்பு முடிந்ததும் மும்பைக்கு பறந்துவிட்டேன். அங்கேதான் ‘சிவாஜி’, ‘ரோபோ’, ‘சிங்கம்’ போன்ற தமிழ்ப் படங்களைப் பார்த்தேன். தென்னிந்திய படங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. இந்த மாதிரியான துறையில் நம்மோட பங்களிப்பும் இருக்கணும் என்ற விருப்பத்துடன் சென்னை வந்தேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு ‘கப்பல்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

‘கப்பல்’ படத்தோட தயாரிப்பாளர் ஷங்கர் பற்றி தெரியுமா?

நான் அவருடைய பெரிய ரசிகை. அவர் இயக்கிய ‘ரோபோ’ படம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஷங்கர் சார் தயாரிக்கும் இந்தப் படத்தில் என்னுடைய பங்களிப்பும் கொஞ்சம் இருக்கு என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.

பொதுவாக என்ன மாதிரியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க விரும்புகிறீர்கள்?

எல்லா வகையான கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்புகிறேன். கிளாமராக நடிக்கவும் எனக்கு சம்மதம்தான். அதே போல் கிளாமர் இல்லாத கேரக்டரும் ஓ.கே.தான். எதிர்காலத்தில் தீபிகா படுகோன் மாதிரி நடிக்கணும். அவர்தான் என் ரோல் மாடல். அவரைப் போல் இந்தியா முழுக்க பேசப்படும் நடிகையாக நான் உருவாக வேண்டும் என்பதுதான் என் ஆசை.

நடிகை என்பதைத் தாண்டி வேறு எந்தத் துறையில் சாதனை படைக்க விரும்புகிறீர்கள்?

ஃபேஷன் ஸ்டைலிஸ்ட் ஆக பணிபுரிய வேண்டும் என்பது என் ஆசை. அந்தத் துறையில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அசத்துவேன்.

தமிழ் சினிமாவில் உங்களை கவர்ந்த நடிகர் யார்?

அஜித். (கொஞ்சம் யோசனைக்குப்பின்..) ம்ம்ம்.. சூர்யா, தனுஷ், ஆர்யா.

SCROLL FOR NEXT