தமிழ் சினிமா

‘காலா’ படத்துக்கு தடை கோரிய வழக்கு: ரஜினிகாந்த், இரஞ்சித் பதிலளிக்க மீண்டும் அவகாசம்

செய்திப்பிரிவு

‘காலா’ படத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், ரஜினிகாந்த், இயக்குநர் இரஞ்சித் மற்றும் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் பதிலளிக்க மீண்டும் ஒரு வாரம் அவகாசம் வழங்கி சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த கே.ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜா, பெருநகர உரிமையியல் 4-வது கூடுதல் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

ரஜினிகாந்தை வைத்து இயக்குநர் இரஞ்சித் ‘காலா என்ற கரிகாலன்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ரஜினிகாந்தின் மருமகன் தனுஷுக்கு சொந்தமான வொண் டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘கரிகாலன்’ என்ற தலைப்பில் படம் எடுப் பதற்காக கடந்த 1995 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் நான் ரஜினி காந்தை சந்தித்து கதை குறித்துப் பேசியுள்ளேன். இந்த தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும் பதிவு செய்துள்ளேன்.

‘கரிகாலன்’ என்ற தலைப்பு மற்றும் கதையின் மூலக்கரு அனைத்தும் என்னுடையது. என்னால் உருவாக்கப்பட்ட கரிகாலன் தலைப்பையும், கதையையும் தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் இரஞ்சித் ஆகியோர் திருடி அதற்கு மறுவடிவம் கொடுத்து தற்போது ரஜினிகாந்தை வைத்து ‘காலா என்ற கரிகாலன்’ படத்தை எடுத்து வருகின்றனர். எனவே, என்னுடைய தலைப்பு மற்றும் அதன் மூலக்கதையை பயன்படுத்த அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி இளங்கோவன், இது தொடர்பாக நடிகர் ரஜினி காந்த், இயக்குநர் இரஞ்சித், தனுஷின் வொண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம், மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று இதே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ‘காலா’ படப்பிடிப்புக் குழு சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, தற்போது மும்பையில் படப்பிடிப்பு நடந்து வருவதால் இதுதொடர்பாக பதிலளிக்க மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரினர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இது தொடர்பாக நடிகர் ரஜினி காந்த், இயக்குநர் இரஞ்சித் உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

SCROLL FOR NEXT