ஜிஸ்டி மற்றும் கேளிக்கை வரி என இரட்டை வரி விதிப்பால், தமிழகத்தில் திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் மூன்றாவது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசிடம் தமிழ்த் திரையுலகினர் பலரும் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளனர்.
இரட்டை வரிவிதிப்பு முறை தொடர்பாக திரையுலகினர் பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
சினிமா வெறும் வியாபாரம் மட்டுமே என்றால் ஏன் வரிகளுக்கு எதிராக வாதிடவேண்டும்? அதிகமாக பணம் சம்பாதித்து, அளவுக்கதிகமாக சம்பளம் கொடுத்துவிட்டு, வரி விலக்கு வேறு கேட்கவேண்டுமா? 100 கோடி க்ளப் என்று கூறி, கோடிகளில் வசூல் என விளம்பரம் செய்துவிட்டு, நட்சத்திரங்கள் சம்பளங்களை ஏற்றிவிட்டு உதவிக்காக அழுவது ஏன்? சினிமாவை காப்பாற்றவா?
சினிமாவைக் காப்பாற்ற வேண்டுமென்றால் சமுதாயப் பொறுப்புணர்வு இருக்கும் படங்களுக்கு, சினிமாவை கலையாய் மட்டும் பார்க்கும் படங்களுக்கு விலக்கு கொடுங்கள். வியாபாரப் படங்களுக்கு அல்ல.
நான் தொழிலுக்காக படங்கள் எடுப்பதில்லை. அவை ஒரு வாரம் கூட ஓடாமல் போனாலும் நான் தொடர்ந்து படம் எடுப்பேன். தவறுகளிலிருந்து கற்றுக் கொள்வேன். நான் மொத்தமாக தமிழ் சினிமாவுக்காக பேசுகிறேன். நம்மிடம் அற்புதமான திறமைகள் இருந்தாலும் நமது அண்டை மாநில சினிமாவைப் போல உன்னத சினிமாக்கள் எடுப்பதில்லை.
நட்சத்திரங்களும், தயாரிப்பாளர்களும் வெறும் வியாபார ரீதியிலான சினிமாவை விடுத்து, புதுமையான கதைகளை ஊக்குவித்தால், தமிழ் சினிமாவைக் காப்பாற்ற முடியும். ஜோக்கர் போன்ற படங்களை எடுக்க முடியும். வரி ஏய்ப்புக்கே வழி இருக்காது. வரி கட்டுபவர்கள் அரசாங்கத்தின் வீண் செலவுகளை கேள்வி கேட்பார்கள். தகவலறியும் உரிமை சட்டம் அவர்களால் ஒழுங்காக பயன்படுத்தப்படும்.
சமீபத்திய ஃபகத் ஃபாசிலின் படம், மஹேஷிண்டே பிரதிகாரம் ஆகியவை உன்னத சினிமாக்கள். தமிழ் சினிமாவுக்கு அந்த அளவு திறன் இருக்கிறது. ஆனா ஏன் நடப்பதில்லை? இயக்குநர்களுக்கு இலக்கியம், வரலாறு, நமது பூமியின் கலாச்சாரம் ஆகியவைப் பற்றிய அறிவு வேண்டும். அதனால் தான் ஜோக்கர் ஒரு உன்னத சினிமா. திரைப்படங்கள் எல்லைகளை அழிக்க வேண்டும், தடைகளை உடைக்க வேண்டும், பெரிய நட்சத்திரங்கள் தங்கள் நட்சத்திர அந்தஸ்த்தை விட்டு வந்து கலைஞர்களாக மாற வேண்டும். நடிகர்கள் கதைகளுக்கு பின்னால் ஓட வேண்டும்.
எழுத்தாளர்களும், இயக்குநர்களும் கொண்டாடப்பட வேண்டும். அவர்கள் தான் நடிகர்களை உருவாக்குகிறார்கள். அப்போதுதான் தமிழ் சினிமாவை காப்பாற்ற முடியும். வரி விலக்கு மட்டுமே அதை செய்யாது.
இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ள ட்விட்டர் கருத்தைக் குறிப்பிட்டு இயக்குநர் அறிவழகன், "ஆம், தைரியமான சமூகம் சார்ந்த படங்கள் யுஏ சான்றிதழுடன் அரசுக்கு வரி செலுத்துகிறது. ஆனால் பெரிய படங்கள் யுஏ சான்றிதழுக்கு அதிகாரிகளிடம் செலுத்துகிறது. அதுதான் வித்தியாசம்" என்று தெரிவித்துள்ளார்.