தமிழ்நாட்டு தண்ணீரைக் குடித்து வளர்ந்தவன் என்று 'கெளதமி புத்ர சாதகர்ணி' தமிழ் இசை வெளியீட்டு விழாவில் பாலகிருஷ்ணா பேசினார்.
பாலகிருஷ்ணா, ஸ்ரேயா, கபீர்பேடி, தணிகலபரணி, சுபலேகா சுதாகர், ஹேமாமாலினி, சிவராஜ் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்கு படம் 'கெளதமி புத்ர சாதகர்ணி'. க்ரிஷ் இயக்கத்தில் உருவான இப்படம் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் தமிழ் பதிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாலகிருஷ்ணா கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் கார்த்தி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் பாலகிருஷ்ணா பேசியதாவது:
சென்னையில் இந்த விழாவில் நான் கலந்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சி. நானும் உங்களில் ஒருவன் தான். சென்னையில் பிறந்தவன், சென்னையில் வளர்ந்தவன். தமிழ்நாட்டு தண்ணீரைக் குடித்து வளர்ந்தவன்.
என்னோட நூறாவது படத்திற்கு நிறைய கதைகளைக் கேட்டேன். புது மாதிரியாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைச்சுக்கிட்டு இருந்தேன். எதுவுமே சரியாக வரவில்லை. இயக்குநர் க்ரிஷ் கூறிய இக்கதையை மிகவும் பிடித்துவிடவே, உடனே நடிக்கிறேன் என சொன்னேன். இது நம்மை ஆண்ட நம் மன்னனின் கதை. இந்தக் கதையை கேட்டவுடனே எங்க அப்பா என்.டி.ஆர், பெரியப்பா எம்.ஜி.ஆர், சித்தப்பா சிவாஜி இவர்களை நினைத்துக் கொண்டேன். இவர்களின் உத்வேகம் இல்லாமல் எந்த படங்களையுமே செய்ய முடியாது.
இப்படத்தில் நடித்தது எனது பெற்றவர்களின் ஆசியும், பெரியவர்களின் ஆசியும் தான். இது இல்லாமல் சாதகர்ணியோட அம்மா கவுதமியோட ஆசிர்வாதமும், சாதகர்ணியின் ஆசியும் தான் இந்த படத்தில் நான் நடித்தது.
அம்மாவை பெருமைப்படுத்துங்கள், நிச்சயம் நன்றாக இருப்போம். அடுத்ததாக நான் கே.எஸ் ரவிகுமார் படத்திலே நடிக்கிறேன். படப்பிடிப்பு கூட தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் 40 நாட்கள் நடக்கிறது. இந்த ‘கௌதமிபுத்ர சாதகர்ணி’ படத்தை குடும்பத்துடன் போய் பாருங்கள். தாயை பெருமைப்படுத்திய இந்தப் படம் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருக்கும் பிடிக்கும்
இவ்வாறு பாலகிருஷ்ணா பேசினார்.
'கெளதமி புத்ர சாதகர்ணி' படத்தின் இசையை கார்த்தி வெளியிட, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணா முழுமையாக தமிழிலேயே பேசினார். மேலும், மேடையில் யார் பாலகிருஷ்ணா பெயரைச் சொன்னாலும் 'ஜெய் ஜெய் பாலய்யா' என்ற கோஷம் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.