விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் 'கோலி சோடா 2' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கப்பட்டது.
பரத், ராஜகுமாரன் உள்ளிட்ட பலர் நடிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான படம் 'கடுகு'. விஜய் மில்டன் தயாரித்த இப்படத்தை சூர்யா வெளியிட்டார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது.
'கடுகு' படத்தைத் தொடர்ந்து, தான் இயக்கவுள்ள அடுத்த படத்தின் முழுப்பணிகளையும் முடித்துவிட்டார் விஜய் மில்டன். 'கோலி சோடா 2' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூலை 10) முதல் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
முழுக்க புதுமுகங்கள் நடிக்கவுள்ள இப்படத்தின் ஒரு பகுதி மட்டும் கூடைப்பந்து விளையாட்டு பின்னணி வருகிறது. இதற்காக புதுமுக நடிகர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணிகளை முடித்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் விஜய் மில்டன்.
'கோலி சோடா 2' படத்தின் படப்பிடிப்புத் தொடங்கப்பட்டதற்கு, இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மற்றும் கதாசிரியர் செம்பன் வினோத் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'கோலி சோடா 2' படத்தையும் விஜய் மில்டனே தயாரிக்கவுள்ளார்.