கேளிக்கை வரிக்கு எதிராகப் போராட்டம் நடத்தக்கூட இந்த ஆட்சியில் அனுமதி கிடைக்கவில்லை என்று நடிகரும் தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் வேதனை தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 30% கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி டி.ராஜேந்தர், சென்னையில் தென்னிந்திய வர்த்தக சபைக்கு அருகில் போராட்டம் நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கேளிக்கை வரியால் பாதிக்கப்பட்டிருக்கும் தயாரிப்பாளர்களின் உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
இது தொடர்பான போராட்டத்துக்கு முறையாக அனுமதி பெற்றிருக்கிறீர்களா என்று நேற்று இரவு கூட என்னை அழைத்து காவல்துறையினர் கேட்டனர். வள்ளுவர் கோட்டத்தில் நான் நடத்த விரும்பிய கடைசிவரை போராட்டத்துக்கு அவர்கள் அனுமதி அளிக்கவே இல்லை. இதில் கலந்துகொள்வதாக இருந்த தயாரிப்பாளர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்று மிரட்டப்பட்டார்கள்.
நாங்கள் இங்கே வேஷம் போட்டு கோஷம் போட வரவில்லை. உணர்வோடு எங்கள் உணர்வைச் சொல்லத் திரண்டிருக்கிறோம்.
என்னை வாழவைத்தது சினிமா. அடையாளம் காட்டியதும் சினிமா. நான் படித்த எம்.ஏ. எனக்கு சோறு போடவில்லை. சினிமாதான் சோறு போட்டது. என்னையும், என் மகனையும் ஆளாக்கியது சினிமாதான்.
ஆந்திர திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருக்கிறேன். அங்கேயும் போராட்டம் நடந்தது. ஆந்திராவில் சுதந்திரமாக அவர்கள் உணர்வை வெளிப்படுத்தியபோது நாமும் வெளிப்படுத்த வேண்டாமா?
திரையரங்குகளையும், அங்கு வரும் ரசிகர்களையும் கையெடுத்துக் கும்பிடுபவன் நான். ஆனால் இன்று தமிழ்நாட்டில் திரையரங்குகள் கிடக்கின்றன மூடி; இந்தியாவை ஆள்கிறார் மோடி.
இந்த போராட்டத்தில் நான் கோடிகளில் புரளும் தயாரிப்பாளர்களைப் பற்றிப் பேசவில்லை. எங்களைப் போன்ற சின்ன தயாரிப்பாளர்களின் நிலை குறித்துத்தான் பேசுகிறோம்.
திரையரங்க உரிமையாளர்களுக்கு ஏன் இந்த இரட்டை வரி? இது எங்களால் தாங்கமுடியாத வலி. சினிமாவுக்கு 28 சதவீதம் வரி விதித்து மத்திய அரசும், 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்து மாநில அரசும் எங்களை வஞ்சிக்கின்றன. இதர வரி 4 சதவீதத்தோடு 62% வரியை எங்களால் தாங்க முடியுமா? இத்தனை சதவீத வரியோடு எங்களால் எப்படி தொழில் செய்ய முடியும்?
இதற்கு விரைவில் தீர்வு எட்டப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.