பிரபுசாலமன் இயக்கவுள்ள 'கும்கி 2' படத்தின் இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'தொடரி' படத்தைத் தொடர்ந்து பிரபுசாலமன் அடுத்த இயக்கவுள்ள 'கும்கி 2' படத்தின் முதற்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். முழுக்க புதுமுகங்களை இதில் நடிப்பதற்காக தேர்வு செய்துள்ளார்.
இதற்கு முன்பாக பிரபு சாலமன் இயக்கிய படங்கள் என்றாலே, இமான் தான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தார். தமிழ் திரையுலகில் பிரபுசாலமன் - இமான் - யுகபாரதி கூட்டணியில் 'மைனா', 'கும்கி', 'கயல்' உருவான படங்களின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து காட்சிப்படுத்துபவர் பிரபுசாலமன் என்பது குறிப்பிடத்தகக்து.
இந்நிலையில், 'கும்கி 2' படத்தின் இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கான காரணம் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை. இம்மாத இறுதியில் 'கும்கி 2' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார் பிரபுசாலமன். ஒளிப்பதிவாளராக சுகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.