விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்துவரும் '96' திரைப்படம் 30 விதமான இடங்களில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
'96' என பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா முதன்முறையாக இணைந்து நடித்து வருகிறார்கள். சென்னையில் படப்பூஜையுடன் தொடங்கப்பட்ட படப்பிடிப்பின் முதற்கட்டமாக அந்தமான் மற்றும் குலுமணாலியில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் விஜய் சேதுபதி பங்கேற்ற பாடல் காட்சியை முதற்கட்ட படப்பிடிப்பில் காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு.
அதனைத் தொடர்ந்து கும்பகோணத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதில் விஜய் சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கவுள்ளார்கள்.
மேலும், இப்படம் பயணம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் சுமார் 30 விதமான இடங்களில், காட்சிப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படங்களில் இதுவரை இவ்வளவு இடங்களில் படமாக்கப்பட்ட படம் எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவாளராக சண்முகசுந்தரம், இசையமைப்பாளராக கோவிந்த் மேனன் ஆகியோர் பணிபுரிந்து வரும் இப்படத்தை ப்ரேம் குமார் இயக்கி வருகிறார். இவர் 'பசங்க', 'சுந்தரபாண்டியன்' மற்றும் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படங்களின் ஒளிப்பதிவாளர் என்பது நினைவுக்கூரத்தக்கது.