நடிகர் கமல்ஹாசனின் ’சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும், கைவிடப்படவில்லை என்றும் படக்குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
’தசாவதாரம்’ படத்தின் பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை மட்டும் வைத்து உருவாகும் தனி படம் ’சபாஷ் நாயுடு’. இதில் முதல் முறையாக கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் அவருடன் நடிக்கிறார். மேலும் பிரம்மானந்தம், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
தற்போது கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பதால் நீண்ட் காலமாக தயாரிப்பில் இருக்கும் ’சபாஷ் நாயுடு’ வெளிவராது என செய்திகள் வந்தன. ஆனால் கடந்த வருடம் கமல்ஹாசன் கால் உடைந்த காரணமாக, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் 7 மாதங்கள் அவர் படப்பிடிப்பு எதிலும் பங்கேற்க முடியாமல் இருந்தார்.
2016 டிசம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்காவில் இருக்கும் கமலின் விசேஷ ஒப்பனைக்கான கலைஞர்களுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் அப்போது படப்பிடிப்பு நடக்கவில்லை.
தொடர்ந்து பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன படப்பிடிப்பு விரைவில் மூன்று மொழிகளிலும் துவங்கும் என படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.