தமிழ் சினிமா

இரட்டை வரி விதிப்பு: ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இயக்குநர் சேரன் வேண்டுகோள்

ஸ்கிரீனன்

இரட்டை வரி விதிப்பு தொடர்பாக குரல் கொடுக்கும்படி ரஜினி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இயக்குநர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜிஸ்டி மற்றும் கேளிக்கை வரி என இரட்டை வரி விதிப்பால், தமிழகத்தில் திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசிடம் தமிழ் திரையுலகினர் பலரும் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து தமிழக அரசு இன்னும் எந்தவொரு அரசாணையையும் பிறப்பிக்கவில்லை.

தமிழ் திரையுலகம் முடக்கத்தால், சமூகவலைத்தளத்தில் இருக்கும் திரையுலகினர் பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், "தமிழ்த் திரைப்படங்களுக்கான 30% கேளிக்கை வரி மற்றும் ஜிஎஸ்டியை குறைக்க தயவு செய்து குரல் கொடுங்கள். உங்கள் குரல் மாற்றத்தை ஏற்படுத்தும். இது எனது வேண்டுகோள்" என தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், "ரஜினி சார்... ஜிஎஸ்டி, 30% கேளிக்கை வரியைக் குறைக்க தயவுசெய்து குரல் கொடுங்கள். நமது துறையைக் காக்க வேண்டிய நேரமிது. உங்கள் குரலுக்கென தனி மதிப்பு இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT