கேளிக்கை வரியில் மறு சீரமைப்பு வரும் வரை தனது சம்பளத்தில் 15 சதவீதம் வரை குறைத்துக் கொள்கிறேன் என்று மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரிக்கு மேலே, தமிழக அரசு 30 சதவீதம் கேளிக்கை வரி உண்டு என்ற அறிவிப்பால் தமிழ் திரையுலகினர் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, இன்று முதல் தமிழக திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கேளிக்கை வரி விதிப்புக்கு, முன்னணி தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி தனது ட்விட்டர் பக்கத்தில் ”திரையரங்குகள் மூடியிருப்பதை பார்க்கும்போது மனது வலிக்கிறது. வரி திரும்பப் பெறப்பட்டு துறை மீண்டும் சரியான பாதையில் செல்லும் என நம்புகிறேன்.
வரி மறு சீரமைப்பு வரை பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு நான் வாங்கும் சம்பளத்தில் 15 சதவீதத்தை குறைத்துக் கொள்கிறேன். இது துறைக்கும் உதவும் என நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மதன் கார்க்கியின் இந்த அறிவிப்புக்கு, ட்விட்டர் தளத்தில் பலரும் வரவேற்பு தெரிவித்து, பாராட்டி வருகிறார்கள்.