'இவன் தந்திரன்' படத்தை தயவு செய்து திரையிட விடுங்கள் என்று இயக்குநர் கண்ணன் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'இவன் தந்திரன்'. விமர்சன ரீதியாக இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜிஎஸ்டி வரி போக, தமிழக அரசு நகராட்சி வரியும் சேர்த்திருப்பதால் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் திங்கட்கிழமை முதல் அனைத்து காட்சிகளையும் ரத்து செய்துள்ளது. இதனால் இயக்குநர் கண்ணன் கடும் அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக இயக்குநர் கண்ணன் பேசிய ஆடியோ பதிவு ஒன்று வெளியிட்டார். அதில்,”மன்னிக்க வேண்டும். என்னால் தொடர்ச்சியாக பேச முடியவில்லை. எனக்கிருக்கும் ஒரே ஆதரவு இயக்குநர்கள் சங்கம் மட்டும் தான். கிட்டதட்ட 25 வருடங்களாக இயக்குநராகவும், உதவி இயக்குநராகவும் இருந்திருக்கிறேன்.
தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்த குழந்தையை, உடனே கழுத்தை அறுத்தால் என்ன வலி இருக்குமோ, அந்த வலியை உணர்கிறேன். ஒரு நல்ல திரைப்படத்துக்கு ஆதரவு தாருங்கள். தொடர்ச்சியாக திரையரங்குகளில் ஓடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று பேசியுள்ளார்.
ஆடியோ பதிவு குறித்து இயக்குநர் கண்ணனிடம் பேசிய போது, "எனது படத்துக்காக மட்டும் பேசவில்லை. 'இவன் தந்திரன்' படத்துடன் 5 படங்கள் வெளியாகவுள்ளன. புதிதாக வெளியாகும் படங்களை வெளியிடுவதில்லை என்ற முடிவே சரியாக இருக்கும். படம் வெளியாகும் முன்பாவது அறிவித்திருக்க வேண்டும். வெளியானவுடனே திங்கட்கிழமை முதல் ஸ்ட்ரைக் என்றால், ஒரு இயக்குநராக என் நிலையை யோசித்துப் பாருங்கள்.
அந்த விரக்தியில் தான் ஆடியோ பதிவு பேசினேன். அதற்கு பிறகு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டவர்கள் தொலைபேசி வாயிலாக பேசினார்கள். கண்டிப்பாக உங்களுக்குத் துணை நிற்போம் என்று கூறியுள்ளார்கள். கண்டிப்பாக இந்த ஸ்டிரைக் நடைபெறாது. அதற்கு முன்பே பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நம்புகிறேன். நம்பிக்கையோடு இருக்கிறேன்" என்று பேசினார் கண்ணன்.