நாங்கள் ஜிஎஸ்டி வரியை எதிர்க்கவில்லை. கேளிக்கை வரியைத்தான் எதிர்க்கிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை படக் காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாங்கள் ஜிஎஸ்டி வரியை எதிர்க்கவில்லை. கேளிக்கை வரியைத்தான் எதிர்க்கிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை படக் காட்சிகள் ரத்து செய்யப்படும். தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை முதல் சுமார் 1000 திரையரங்குகள் மூடப்படும்.
சினிமா துறையில் ஜிஎஸ்டி வரி 28%, கேளிக்கை வரி 30% வசூலிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் 58% வரி விதித்தால் திரையரங்குகள் எப்படி செயல்பட முடியும்? 100 ரூபாய் டிக்கெட் வருமானம் என்றால் அதில் 58 ரூபாய் அரசுக்கே செலுத்த வேண்டி உள்ளது. ரூ.50 முதல் ரூ.200 வரை சினிமா கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.
பிற மாநிலங்களைப் போல் ஒரே வரி விதிப்பு முறையை சினிமா துறைக்கு அமல்படுத்த வேண்டும்'' என்றார்.