அமைச்சர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதால் கடந்த 4 - நாட்க ளாக நடந்து வந்த திரையரங்குகள் போராட்டம் திரும்பப் பெறப் பட்டது.
சினிமா திரையரங்குகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் உள்ளாட்சி சார்பில் 30 சதவீத கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திரைத்துறை பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறி, கடந்த திங்கள்கிழமை முதல் திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் சுமார் 1,000 திரையரங்குகளில் அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், முதல்வர் கே.பழனிசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், வீரமணி, வேலுமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்டவர் களோடு திரைத்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாததால் கடந்த 4 நாட்களாக திரையரங்குகள் இயங்கவில்லை.
இந்நிலையில், அமைச்சர் களுடன் திரைத்துறையினர் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக ‘தி இந்து’விடம் திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன் கூறியதாவது:
கடந்த 4 நாட்களாக சுமார் 1,000 திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இதனால், நாளொன்றுக்கு சுமார் ரூ.20 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டது. எங்களின் சிரமங்களை அமைச்சர்கள் புரிந்துகொண்டனர். இரு தரப்பிலும் குழு அமைக்கப் பட்டு, சுமுக முடிவை எட்டுவது என பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திரைத்துறை சார்ந்த குழுவில் யார், யார் இடம்பெறுவது என்பது குறித்து வெள்ளிக்கிழமை (இன்று) முடிவு செய்வோம்.
பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதால் எங்கள் போராட்டத்தை திரும்பப் பெறுகி றோம். திரையரங்குகள் வெள்ளிக் கிழமை முதல் வழக்கம்போல செயல்படும். சினிமா கட்டணத் துடன் ஜிஎஸ்டி வரியும் சேர்த்து வசூலிக்கப்படும். 30 சதவீத கேளிக்கை வரியை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று முதல் புதிய கட்டணம்
ஜிஎஸ்டி வரியையும் சேர்த்து வசூலிப்பதால் சினிமா டிக்கெட் கட்டணம் உயர்கிறது. ரூ.120 டிக்கெட், ஜிஎஸ்டியோடு சேர்த்து ரூ.153.60-க்கும், ரூ.100 டிக்கெட் ரூ.118-க்கும், ரூ.50 டிக்கெட் ரூ.59-க்கும், ரூ.10 டிக்கெட் ரூ.12-க்கும் விற்கப்படும். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஆன்லைனில் டிக்கெட் பெற கூடுதலாக ரூ.30 செலுத்த வேண்டும்.
திரையரங்குகளின் வேலை நிறுத்தத்தால் முந்தைய வாரங் களில் ரிலீஸான ‘வனமகன்’, ‘இவன் தந்திரன்’ உள்ளிட்ட சில படங் களை மீண்டும் வெளியிட உள்ள தாக படக் குழுவினர் அறிவித் துள்ளனர்.