சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க, புதிய படமொன்றுக்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவிருந்தார் சூர்யா.
ஆனால், 'நெஞ்சம் மறப்பதில்லை' வெளியீடு மற்றும் 'மன்னவன் வந்தானடி' படத்தின் பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தால் செல்வராகவன் - சூர்யா இணை இணைய தாமதமாகும் எனத் தெரிகிறது.
இதனிடையே சுதா கொங்கரா கூறிய கதை சூர்யாவுக்கு பிடித்துவிடவே, அதில் நடிக்க முடிவு செய்துள்ளார். 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷை இசையமைக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, படப்பணிகள் தொடங்கவுள்ளார்கள்.
இதுவரை சூர்யாவின் படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்ததில்லை. முதல் முறையாக இந்த இணை சுதா கொங்கரா படத்துக்கு இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.