சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள 'சங்கமித்ரா' படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணத்தை படக்குழு தெரிவிக்கவில்லை.
பிரான்ஸில் கான் திரைப்பட விழாவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள 'சங்கமித்ரா' படம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் அறிமுக விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் முரளி ராமசாமியும் பங்கேற்றனர்.
இவ்விழாவில் 'சங்கமித்ரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இதில் 'சங்கமித்ரா' என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக லண்டனுக்கு சென்று வாள் பயிற்சி எல்லாம் கற்றுக் கொண்டார் ஸ்ருதிஹாசன். இதன் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தற்போது "தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்ருதிஹாசனுடன் 'சங்கமித்ரா' படத்தில் தொடர்ந்து பணிபுரிய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது" என்று தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் ஸ்ருதிஹாசனை வைத்தே இப்படத்தின் பணிகள் அனைத்துமே நடைபெற்று வந்தது. தற்போது அவருக்கு பதில் யார் நடிப்பார் என்பது விரைவில் தெரியவரும்.