போலீஸாரின் செயல்களை நியாயப்படுத்த முடியாது. விசாரணையும், நடவடிக்கையும் தேவை என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் தமிழகமெங்கும் முடிவுக்கு வந்தது. தமிழகமெங்கும் நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கெடுத்து மாணவர்களிடையே உரையாற்றியவர் ஆர்.ஜே.பாலாஜி.
நேற்று (ஜனவரி 23) மெரினா போராட்ட மாணவர்கள் கலைய மாட்டோம் என்று கூறிய போது, "வீடுகளுக்கு திரும்புங்கள். போராட்டம் முடிந்துவிட்டது" என்று வீடியோ பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், மெரினாவுக்குச் சென்று அங்குள்ள இளைஞர்களோடும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜி திங்கட்கிழமை இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் "கடந்த 6 நாட்களாக போலீஸார் மிகவும் ஆதரவாகத்தான் இருந்தார்கள். ஆனால் இன்று போலீஸார் இருக்கும் சில வீடியோக்களில் இருக்கும் செயல்களை நியாயப்படுத்த முடியாது. கண்டிப்பாக விசாரணையும், நடவடிக்கையும் தேவை" என்று தெரிவித்தார்.
மேலும், தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் "1940 போராட்டத்தில் தமிழர்கள் ஒன்றாகத் திரண்டபோது நான் உயிரோடு இல்லை. ஆனால் இன்று அதே போன்றொரு சூழலைப் பார்க்க உயிரோடு இருக்கிறேன். அதே போன்ற உத்வேகத்தை மாணவர்களிடம் பார்க்கிறேன்.
உங்களது உறுதி, வலிமை மற்றும் உணர்வுகளை பகிர்ந்துகொண்டது எனக்கு அதிர்ஷ்டமே. இந்த அற்புதமான போராட்டத்தில் பங்கெடுக்க எனகும் ஒரு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. உத்வேகம் கொண்டவர்களை இணைக்க, அவர்களுக்கு இடையே ஒரு தூதனாக இருப்பதை விட பெரிய பெருமை இல்லை.
மரியாதையுடனும், ஒற்றுமையுடன் அதை நடத்திக்காட்டிய உங்கள் ஒவ்வொருக்கும் வணக்கம் செலுத்துகிறேன். வரலாற்றின் இந்தத் தருணம் உங்களுடையது, உங்களுடையது மட்டுமே. வேறு மாதிரியான நல்ல முடிவு வரும் என எதிர்பார்த்தேன்.
பட்ட கஷ்டங்களுக்கு ஏற்ப நல்ல முடிவுக்கு நாம் தகுதியானவர்களே. நாளை, இன்னும் பெரியதாக, பிரகாசமாக இருக்க இறைவன் நம்மை ஆசிர்வதிக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி