திருட்டு டிவிடி விவகாரம் தொடர்பாக விஜய் ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர். அதற்கு விஷால், தனுஷ் தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காவல் துறை இயக்குநரிடம் திருட்டு டிவிடிக்கு எதிராக புகார் ஒன்றை அளித்திருக்கிறார்கள். அதில், "'தொடரி' மற்றும் 'ஆண்டவன் கட்டளை' ஆகிய திரைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையதளத்தில் வெளியாகி அதனை தரவிறக்கம் செய்து திருட்டு டிவிடிக்களாக பதிவு செய்து தமிழகம்,புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் விற்கப்படுகிறது. திரையுலகின் முக்கிய பிரச்சினையான இதை பொது நலன் கருதி உடனடியாக விசாரணை நடத்தி துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்கள்.
தனது படத்தின் திருட்டு டிவிடி தொடர்பாக விஜய் ரசிகர்கள் புகார் அளித்திருப்பதற்கு தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார்.
மேலும், விஷால் "நடிகர் விஜய்யின் ரசிகர்கள் குழுவினர் திருட்டு டிவிடிக்களை ஒழிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. பிற நடிகர்களின் ரசிகர்களும் இம்முயற்சியில் இறங்க வேண்டும். அப்படி நடந்தால் மாற்றம் நிச்சயம் என்பதை அடித்துச் சொல்வேன்." என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.