தமிழ் சினிமா

ஜல்லிக்கட்டு விவகாரம்: பிரதமர் மோடியை சந்திக்க விஷால் டெல்லி பயணம்

ஸ்கிரீனன்

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க விஷால் இன்றிரவு( ஜனவரி 18) டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இப்போராட்டத்தை முன்வைத்து விஷால், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் கூறியதாவது, "ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக போராடி வரும் இளைஞர்களுக்காக தலை வணங்குகிறேன்.

இளைஞர்கள் இப்போராட்டத்தில் இறங்கியதால் மட்டுமே தீர்வு கிடைக்கும். பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளேன். அவரால் மட்டுமே இதற்கு ஒரு முடிவு கட்ட முடியும். பிரதமரால் மட்டுமே அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்றி இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

ஜல்லிக்கட்டுக்கு நான் என்றுமே தடையாக இருந்ததில்லை. அதை நான் என்றுமே ஆதரிக்கிறேன். பாரம்பரிய விளையாட்டு நடைபெற்றே ஆகவேண்டும். எனக்கு பிரதமரை சந்திக்க நேரம் கிடைத்தால், அத்தனை தமிழக இளைஞர்கள் சார்பாக சந்திப்பேன்.

பீட்டாவுக்கு முழு அர்த்தம் தெரியாது. நான் ஒரு மிருகங்கள் மீது பிரியம் வைத்துள்ளேன். எனக்கும் பீட்டாவும் சம்பந்தமில்லை. நான் அதில் உறுப்பினருமில்லை" என்று தெரிவித்தார் விஷால்

மேலும், விஷால் மோடியிடம் நேரில் சந்திக்க அனுமதிக்கும்படி கேட்டிருந்தார். அப்பாயின்மென்ட் கிடைத்ததால் விஷால் டெல்லி சென்று, நாளை பிரதமரை நேரில் சந்திக்க உள்ளார்.

SCROLL FOR NEXT