அஜித் நடிப்பில் துவங்கப்பட்ட 'மகா' படம் கைவிடப்பட்டதன் பின்னணி குறித்து இயக்குநர் நந்தா பெரியசாமி பதிவு செய்துள்ளார்.
நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில், அஜித் நடிக்க ஆரம்பிக்கப்பட்ட படம் 'மகா'. ஆனால், அப்படம் பாதியிலே கைவிடப்பட்டது. ஏன் கைவிடப்பட்டது என்பதற்கான காரணத்தை இயக்குநர் நந்தா பெரியசாமி தன்னுடைய ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
அதில், "பல பேருக்கு தெரியாத ஒரு செய்தி. நான் முதன் முதலாக இயக்கிய படம் ’மகா’. அதன் நாயகன் அஜித். எட்டு நாள் தொடர்ந்த சண்டைக்காட்சியில் அவர் கால் எலும்பு முறிந்தது.
நீண்ட ஓய்வுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தார். அடுத்த நான்கு நாட்களாக படப்பிடிப்பு தொடர்ந்தது, ஆனால் வலி காரணமாக அஜித்தால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. இந்த சூழலில் தயாரிப்பாளர் சக்கரவர்த்திக்கும் அஜித்திற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மொத்தம் 12 நாட்கள் படப்பிடிப்போடு 'மகா' படம் நிறுத்தப்பட்டது
ஒளிப்பதிவாளர் ஜீவா, பாலகுமாரன், வைரமுத்து, ஹாரிஸ் ஜெயராஜ், கனல் கண்ணன், தோட்டா தரணி என பெரிய கூட்டணி கிடைத்தும் படம் தொடராமல் என் கனவு முடிந்தது. இன்னமும் கரு கலைந்த ஒரு தாயின் வலி தொடர்கிறது
ஒரு வேளை இந்த படம் என் முதல் படமாக இருந்திருந்தால் என் திரையுலக வாழ்வு வேறு மாதிரி உயர்ந்திருக்கும். முதன் முதலாக அஜித் போலீஸ் அதிகாரியாக வேடம் ஏற்றது 'மகா' படம் என்பது குறிப்பிடத்தக்கது" என்று தெரிவித்துள்ளார் நந்தா பெரியசாமி.