தமிழ் சினிமா

உண்மைச் சம்பவங்களைத் தழுவி கதைக்களம்: மகிழ் திருமேனி தகவல்

ஸ்கிரீனன்

சில சிறந்த கதைகள் நம்மைச் சுற்றி நடக்கும் உண்மைச் சம்பவங்களை தழுவியதுதான். இதுவும் அப்படிப்பட்ட ஒரு கதையே என்று அருண்விஜய் படம் குறித்து மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.

'குற்றம் 23' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார் அருண்விஜய். இறுதியாக மகிழ்திருமேனி கூறிய கதை பிடித்துவிடவே, இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தை 'குற்றம் 23' படத்தை தயாரித்த இந்தர்குமார் தயாரிக்கவுள்ளார்.

அருண்விஜய் - மகிழ்திருமேனி இருவரது இணைப்பில் வெளியான 'தடையற தாக்க' படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்துக்கான முதற்கட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இப்படத்தின் கதைக்களம் குறித்து மகிழ் திருமேனி, "இம்முறை புதிதாக ஒன்றை முயற்சிக்கவுள்ளேன். ஆக்‌ஷன் படம் கிடையாது. ஆனால் படத்தில் மர்மம் கலந்திருக்கும். ஒரு குற்றச்செயலின் தொடக்கம், அதன் தாக்கம் ஆகியவற்றை பற்றியது.

தன் கட்டுப்பாடை மீறி குற்றம் புரியும் மனிதப் போக்கைப் பற்றியது. சில சிறந்த கதைகள் நம்மைச் சுற்றி நடக்கும் உண்மைச் சம்பவங்களை தழுவியதுதான். இதுவும் அப்படிப்பட்ட ஒரு கதையே. அடிக்கடி சொல்லும் ஒரு விஷயமாக இருந்தாலும் சொல்கிறேன், படம் வெளியாகும்போது அருணின் இன்னொரு பரிமாணத்தை பார்க்கலாம்.

அவரது ஆற்றல் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. அதை இந்த படத்துக்காக பயன்படுத்துவோம்" என்று தெரிவித்துள்ளார் அருண்விஜய். விரைவில் நாயகி மற்றும் இதர நடிகர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT