ஒரே நாளில் மதுரை மற்றும் சென்னை என இரண்டு இடங்களில் 'ஜில்லா' படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.
விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி, மஹத் என பலர் நடிக்கும் 'ஜில்லா' படத்தினை இயக்கி வருகிறார் நேசன். இமான் இசையமைக்க, ஆர்.பி.செளத்ரி தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. விஜய், காஜல் நடனமாடிய ஒரு பாடல் காட்சியை ஜப்பானில் படமாக்கிவிட்டு திரும்பி இருக்கிறது படக்குழு.
பொங்கல் வெளியீடு என்பதால் படப்பிடிப்பை துரிதப்படுத்தி இருக்கிறார்கள். நவம்பர் 6ம் முதல் மதுரை மற்றும் சென்னை என இரு இடங்களிலும் 'ஜில்லா' படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.
விஜய், காஜல் பங்குபெறும் பாடலை சென்னையில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்பாடலுக்கு ராஜு சுந்தரம் நடனம் அமைக்கிறார். அதே நேரத்தில் மதுரையில் ஒரு சண்டைக் காட்சியினை படமாக்க இருக்கிறார்கள்.
மதுரையில் நடைபெறும் படப்பிடிப்பிற்கு ப்ரியன் ஒளிப்பதிவாளராகவும், சென்னையில் நடைபெறும் பாடல் காட்சிக்கு கணேஷ் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றவிருக்கிறார்கள்.
ஜனவரி 10ம் தேதி வெளியிடலாம் என்று தீர்மானித்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறதாம் 'ஜில்லா' படக்குழு. இதே தேதியில் தான் வெளியிடலாம் என்று 'வீரம்' படக்குழுவும் முடிவு செய்திருக்கிறது.