தமிழ் சினிமா

2.0 அப்டேட்: அக்டோபரில் இசை வெளியீடு நடத்த படக்குழு திட்டம்

ஸ்கிரீனன்

ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் '2.0' படத்தின் இசை வெளியீடு, துபையில் அக்டோபர் மாதம் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள '2.0' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள், பல்வேறு நாடுகளில் துரிதமாக நடைபெற்று வருகிறது. முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள படம் என்பதால், கிராபிக்ஸ் காட்சிகள் எந்தவொரு தவறும் நடந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனம் எடுத்து செயலாற்றி வருகிறது படக்குழு.

முதலில் தீபாவளி வெளியீடாக அக்டோபர் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால், கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாத காரணத்தால், ஜனவரி 25,2018 வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் இசை வெளியீட்டை நடத்த முடிவு செய்துள்ளார்கள். படக்குழுவினரோடு பல்வேறு முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் பங்குபெறும் இவ்விழாவை துபாயில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷு பாண்டே உள்ளிட்ட பலர் ரஜினியோடு நடித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது.

SCROLL FOR NEXT