’கற்றது தமிழ்’, ’தங்க மீன்கள்’ வரிசையில் உலகமயமாக்கலின் தாக்கத்தை எடுத்துச் சொல்லும் கடைசிப் படம் ’தரமணி’ என்று இயக்குநர் ராம் தெரிவித்திருக்கிறார்.
வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிக்க ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'தரமணி'. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் 'தரமணி' படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ராம் 'தி இந்து' ஆங்கிலத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "’கற்றது தமிழ்’, ’தங்க மீன்கள்’ வரிசையில் உலகமயமாக்கலின் தாக்கத்தை எடுத்துச் சொல்லும் கடைசிப் படம் ’தரமணி’. இந்தப் படம் உலகமயமாக்கல் ஆண் - பெண் உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே கதை.
இவ்வாறு நான் சொல்வதால் நான் முழுக்க முழுக்க உலகமயமாக்கலுக்கு எதிரானவன் என நினைக்காதீர். உண்மையில் உலகமயமாக்கல் கொள்கை பெண்களுக்கு அதிக நம்பிக்கையை விதைத்துள்ளது.
பெண்களின் சுய மரியாதையும், சுய மதிப்பீடும் அதிகரித்திருக்கிறது. கடல் கடந்து சென்று தங்களுக்கான தொழில் வாய்ப்புகளை விஸ்தரித்துக் கொள்ள வழிவகை செய்துள்ளது. ஏன் பெண்ணைப் பெற்ற தந்தைகள்கூட தங்கள் குறுகிய பார்வையை மாற்றிக் கொண்டுள்ளனர். இருந்தாலும், ஒரு பெண்ணுடன் வேலை செய்யும் சக ஆண் ஊழியர் அவரை எப்படி பார்க்கிறார். இது எப்படி ஆண் - பெண் உறவில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதைத் தான் ’தரமணி’ படம் அலசுகிறது.
’கற்றது தமிழ்’ படம் மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்களுக்கு எதிரானது எனக் கூறப்படுகிறது. ஆனால், அப்படமானது சேவைத் துறைக்காக கலை, மனிதவளம் சார்ந்த படிப்புகள் புறக்கணிக்கப்பட்டால், சமூகத்தில் எப்படி பொருளாதார சமன் சீர்குலையும் என்ற யதார்தத்தை உணர்த்துவதே. இதன் விளைவு சைக்கோபாத் போல சோசியோபாத் என்ற ஒரு பிரிவினர் உருவாக்கப்படிருக்கின்றனர்.
’தங்க மீன்கள்’ படமும் தனியார்மயமாக்கலால் நமது கல்வித் துறையை எப்படி சீர்குலைத்திருக்கிறதை என்பதை விரிவாக பேசப்பட்டிருக்கும். மேலும், அதனால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது. ஒரு குழந்தைக்கு சமூகம் எப்படியெல்லாம் முத்திரை குத்துகிறது என்பதையும் விவரித்திருக்கும். ஒரு தந்தை - மகள் உறவுப் பின்னணியில் சொல்லப்படாமல் இருந்திருந்தால் அந்தக் கதை ஒரு ஆவணப்படமாக ஆகியிருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
’தரமணி’ ஒரு சர்வதேச தரத்திலான கதை. உலகமயமாக்கல் ஆண் - பெண் உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது விரிவாக அலசும் கதை" என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ராம்.