'பிரியாணி' திரைப்படம் டிசம்பர் 20ம் தேதி, கிறிஸ்துமஸ் தின விடுமுறை தினங்களுக்கு வெளியாகும் என்று ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.
கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி நடிக்க, வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் படம் 'பிரியாணி'. இது யுவன் இசையமைத்திருக்கும் 100 வது படம்.
'பிரியாணி' படம் தான் கார்த்திக்கு முதலில் வெளிவருவதாக இருந்தது. ஆனால் படத்தின் பணிகள் முடியாததால், 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தினை வேகமாக தயார் செய்து தீபாவளிக்கு வெளியிட்டார்கள். 'பிரியாணி' திரைப்படம் பொங்கல் 2014க்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் 'கோச்சடையான்', 'வீரம்', 'ஜில்லா' உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு போட்டியிடுவதால், அதே தினத்தில் 'பிரியாணி' படத்தினையும் வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்தார்கள்.
கிறிஸ்துமஸ் தின விடுமுறைகளை கணக்கில் கொண்டு வெளியிடலாமா என்று ஆலோசித்து வந்தார்கள். தற்போது டிசம்பர் 20ம் தேதி 'பிரியாணி' வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் பிரபு, “'பிரியாணி' திரைப்படம் டிசம்பர் 20, 2013 அன்று வெளியாகும். அனைவரும் பிரியாணி விருந்திற்கு தயாராக இருங்கள்” என்று தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
டிசம்பர் 20ம் தேதி தான் ஜிவா நடிப்பில் உருவாகியிருக்கும் 'என்றென்றும் புன்னகை' படமும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.