தமிழ் சினிமா

அவரும் எனக்கு அண்ணன் தான்: ரஜினியின் பேச்சுக்கு கமல் பதில்

ஸ்கிரீனன்

அவரும் எனக்கு அண்ணன் தான். அவரிடம் ஐடியாக்கள் கேட்டுக் கொள்கிறேன் என்று ரஜினியின் பேச்சுக்கு கமல் பதிலளித்தார்.

நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் லண்டனுக்கு சென்றிருந்த போது அங்கு காலமானார். ராஜ்கமல் நிறுவனத்தை நிர்வாகித்து வந்தவர் சந்திரஹாசன். கமல்ஹாசனுக்கு நெருக்கமான நண்பர்கள் அனைவருக்கும் பரிச்சயம் ஆனவர் சந்திரஹாசன்.

சந்திரஹாசனுக்கு இரங்கல் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ரஜினி பேசும் போது, "அனந்து, பாலசந்தர், சாருஹாசன், சந்திரஹாசன் ஆகிய நால்வரும் தான் கமலுடைய உயிர்கள். 3 பேர் உயிருடன் இல்லை. ஆனால் அவர்களுடைய ஆத்மா எப்போதுமே கமலுடன் இருக்கும். நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் கமல்" என்று பேசினார்.

'சந்திரஹாசன் நினைவஞ்சலி' கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியது "'விஸ்வரூபம்' சமயத்தில் தான் பத்திரிகையாளர்களுக்கு சந்திரஹாசனை தெரிய ஆரம்பித்தது. அப்பிரச்சினையில் தான் வெளியே வருவார். என்னுடைய நன்னடத்தைக்கும், எனது நிறுவனத்தின் நல்ல வழிமுறைகளுக்கும் அவர் தான் காரணம்.

என்னில் நல்ல விஷயங்கள் ஏதாவது உங்களுக்கு தென்படுகிறது என்றால், அது அவரிடம் கற்ற்றுக் கொண்ட விஷயங்கள் தான். என் அண்ணன் நேர்மையான ஒரு இந்தியன். எந்தளவுக்கு நேர்மை என்றால், என்னுடைய மனசாட்சிப்படி பொய் சொல்லக் கூடாது என்று வாழ்ந்து காட்டியவர் அவர்.

ஒழுங்காக வருமான வரிக்கட்டுவதைப் பெருமையாக சொல்லிக் கொள்கிறேன் என்றால், அதற்கு வழியமைத்துக் கொடுத்தவர் சந்திரஹாசன். தன்னுடைய தம்பி கமல்ஹாசன் என்பதில் அவருக்கு பெருமை” என்று பேசினார்.

செய்தியாளர்கள் ரஜினியின் பேச்சை குறிப்பிட்டு கேள்வி எழுப்பினர். அதற்கு "ரஜினியும் எனக்கு அண்ணன் தான். அவரிடம் ஐடியாக்கள் கேட்டுக் கொள்கிறேன். கலை ஞானமும், வியாபார யுத்தியும் தெரிந்த நிறைய அண்ணன்கள் எனக்கு இன்னமும் இருக்கிறார்கள். அதில் ஒருவர் ரஜினியும் கூட." என்று பதிலளித்தார் ரஜினி.

SCROLL FOR NEXT