கேமிராவுக்குப் பின்னால் நடிக்கவே மாட்டார் ரஜினி என்று ரசிகர்களுடனான சந்திப்பில் எஸ்.பி.முத்துராமன் ரஜினிக்கு புகழாரம் சூட்டினார்.
நடிகர் ரஜினிகாந்த், நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களைச் சென்னையில் சந்தித்துப் புகைப்படம் எடுத்து வருகிறார். மே 19-ம் தேதி வரை 5 நாட்களுக்கு இந்த ரசிகர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி என்பதால் கலந்துகொள்ளும் ரசிகர்களுக்கு அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய ‘க்யூஆர்’ கோடுடன் கூடிய விஷேச அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே ரஜினியோடு புகைப்படம் எடுக்க மண்டபத்தினுள் அனுமதிக்கப்பட்டார்கள்.
ரசிகர்களுடனான சந்திப்பில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனோடு ரஜினி கலந்து கொண்டார். இச்சந்திப்பில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசியதாவது:
"ரஜினிகாந்த் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது, அவருக்கு மருத்துவர்கள் செய்த உதவி பாதி என்றால், அவர் நலமாக வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்த ரசிகர்கள் பாதி. எத்தனை பேர் மொட்டை போட்டுக் கொண்டார்கள், அங்கப்பிரதட்சணம் செய்து கொண்டார்கள், மண் சோறு சாப்பிட்டார்கள் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் நான் பல ஊர்களுக்கு நேரில் சென்று பார்த்தேன் என்பதை பெருமையோடு இந்த மேடையில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, ரஜினி உயிரோடு எழுந்து, எழுச்சியோடு வந்திருப்பதற்கு உங்களுடைய பலமும், ஊக்கமும், பிரார்த்தனையும் தான் காரணம்.
நான் ரஜினியைக் காணும் போதெல்லாம் ரசிகர்களை சந்திக்க வேண்டும், சந்திக்க வேண்டும் என்று சொன்னேன். 'கபாலி' பட மேடையிலேயே ரஜினியிடம் வேண்டிக் கொண்டேன். எப்படி முத்துராமன் இவ்வளவு ரசிகர்களை சந்திப்பது என்று பயந்தார். நிச்சயமாக சந்திப்போம் என்று முடிவு எடு, நல்லவை நடக்கும் என்று சொன்னேன். அந்த வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து, ரசிகர்களைப் பார்ப்பதற்கு பலவிதமான முயற்சிகளை செய்து இன்று சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரசிகர்கள் உற்சாகத்தை வெளியே மட்டுமே காட்ட வேண்டும். இவ்விழா நெறிப்படுத்தி நடக்கும் விழாவாக இருக்க வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் விசிலடிப்பார்கள், கத்துவார்கள் என்ற நிலையை மாற்றி, நாமும் நெறியாக நடந்து காட்டுவோம் என நிரூபித்துக் காட்ட வேண்டும். அனைவருமே ரஜினி ரசிகர்கள் சிறப்பாக நடந்து கொண்டார்கள் என்று சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு படம் தொடங்குவதற்கு முன்பும் போட்டோ செஷன் என ஒன்று எடுப்போம். கதாபாத்திரத்தின் தன்மையை விளக்கும் வகையில் அந்த புகைப்படங்கள் அமையும். ரஜினிக்கும், ரசிகர்களுக்கும் இடையே நடக்கிற போட்டோ செஷன் தான் இந்த விழா.
ரஜினிக்கு எப்படி சார் இவ்வளவு புகழ் வந்தது என்று பலரும் கேட்கிறார்கள். ஸ்டைல் நடிப்பு, ஸ்பீட் நடிப்பு, அழகிய நடிப்பு, ஃபைட், பாடல்கள், பாடல்களில் வரும் நாயகிக்காக ஒரு ஸ்டைல், ரசிகர்களுக்காக ஒரு ஸ்டைல் என பல விஷயங்கள் உள்ளது. இப்படி செய்தால் என் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்பதை உணர்ந்து செய்வார். இவ்வளவு நடிப்பாற்றாலும் வைத்துத் தான் உங்களை எல்லாம் அழைத்தார். அதனால் தான் நீங்கள் எல்லாம் ரசிகர்களாக இருக்கிறீர்கள்.
அதற்கும் மேலே அவர் மீது ஒரு அன்பு இருக்கிறது, பாசம் இருக்கிறது. ஏனென்றால் கேமிராவுக்கு முன்னால் தான் நடிப்பாரே தவிர, கேமிராவுக்கு பின்னால் நடிக்கவே மாட்டார். அந்த வாழ்க்கை உண்மையான வாழ்க்கை. பிடித்தது என்றால் பிடித்தது, பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று முகத்திற்கு நேராக சொல்லிவிடுவார்.
அவரை வைத்து 25 படங்களை இயக்கியுள்ளேன். அவருடைய 25 படங்களை இயக்கியுள்ளேன் என்றால் அவரது ஒத்துழைப்பு எப்படியிருக்கும் என நினைத்துக் கொள்ளுங்கள். நடிகனாக மட்டுமல்ல நல்ல நண்பனாக இருக்கிறார். அவரே அடிக்கடி எனக்கு பெங்களூரில் ஒரு அண்ணன், சென்னையில் ஓர் அண்ணன் இருக்கிறார்கள். சென்னையில் இருக்கும் அண்ணன் எஸ்.பி.முத்துராமன் என்று சொல்வார். அதனால் தான் இன்று இம்மேடையில் நிற்கிறேன்.
நான் ரஜினியோடு படம் செய்து 10 வருடங்களாகிவிட்டது. 10 வருடங்கள் ஆனால் இந்த நட்பு வளர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை. 'புவனா ஒரு கேள்விக்குறி' படப்பிடிப்பு தளத்தில் அவரை சந்தித்தேன். அதிலிருந்து 25 படங்களை நான் செய்திருக்கிறேன் என்று சொன்னால் அவருடைய பண்பு. என்னை முதலில் சந்திக்கும் போது எப்படியிருந்தாரோ, அதே பண்புடன் தான் இன்றும் இருக்கிறார்.
ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார், உலகமெங்கும் புகழ், போஸ்டர்கள் என்ற எந்தவொரு பாதிப்பும் அவருக்கு இல்லை. புகழைக் கொண்டு போய் தலையில் வைத்துக் கொள்ளாத மனிதர் ரஜினிகாந்த். அதற்கு உதாரணமாக ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். 'புவனா ஒரு கேள்விக்குறி' படத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்ய போகும் போது, ராயப்பேட்டையில் ஒரு குடிசையில் நண்பர்களுடன் இருந்தார். அங்கிருந்து படிப்படியாக வளர்ந்த பிறகும், குடிசையை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த கல்யாண மண்டபத்தில் இருக்கும் அவருடைய வீட்டு மாடியில் அதே போன்றதொரு குடிசையை போட்டு வைத்திருக்கிறார்.
ஒரு முறை அதைப் பார்த்துவிட்டு, "இவ்வளவு அழகான இடத்திலே ஏன் ரஜினி குடிசையைப் போட்டு வைச்சுருக்க. கட்டிடமாக மாற்றிவிட வேண்டியதானே?" எனக் கேட்டேன். "இல்லை முத்துராமன் சார்.. நம்ம வளர்ந்த இடம் குடிசை என்பதை என்றும் நினைக்க வேண்டும் என்பதற்காக போட்டு வைத்துள்ளேன்" என்றார் ரஜினி. இந்தளவுக்கு வளர்ந்தாலும், எங்கிருந்து வந்தோம் என்பதை நினைத்துக் கொண்டிருப்பதே அவருடைய வெற்றிக்கு காரணம்.
ரஜினியின் புகழுக்கு நடிப்பு, வாழ்க்கை, சம்பாதிப்பது என்பதைத் தாண்டி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. சம்பாதித்தது அனைத்தையும் கர்நாடகாவுக்கு கொண்டு போய்விட்டார் என பல பேர் வாட்ஸ் - அப்பில் வேண்டாத செய்திகளை எல்லாம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றைச் சொல்லி கொள்ள விரும்புகிறேன். எப்படி கொடுக்க வேண்டுமோ, அதை வருடந்தோறும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கொடுத்து புகழ் பெறுவது நமது ரஜினியின் பழக்கம்.
உள்ளத்தில் பொய் இல்லாமல் வாழ்ந்தால் உலகத்து மக்களின் மனதில் இடம் பிடிக்க முடியும். அந்த வள்ளுவன் சொல்லுக்கு எடுத்துக்காட்டும் மனிதனாக ரஜினி திகழ்கிறார். நீங்கள் அனைவரும் ரஜினியோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள். அந்த புகைப்படம் எடுக்கும் போது, முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே நிறையப் பேர் புகைப்படம் எடுக்க முடியும். ஒவ்வொருவராக வந்து ரஜினியிடம் கை கொடுக்கக் கூடாது, காலில் விழக்கூடாது. ரஜினியைப் பார்த்துக் கொண்டே வந்து வணக்கம் சொல்ல வேண்டும். ரஜினியின் கண்களைப் பார்த்தாலே போதும், அதுவே கதைகள் சொல்லும். ரஜினி சாரின் கண்களைப் பார்த்து தான் பாலசந்தர் சார் இவரைத் தேர்வு செய்தார்.
ரஜினியோடு எடுத்த புகைப்படத்தை வீட்டில் மாட்டி வைத்து, படம் எடுத்துவிட்டேன் என்ற பெருமையை மட்டும் பேசக் கூடாது. ரஜினியின் படத்தை வீட்டிலே வைக்கும் போது ஒரு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த தலைவர் ரஜினிக்கு நாம் தொண்டராக இருக்கிறோம், ரசிகராக இருக்கிறோம். அந்த சூப்பர் ஸ்டாரைப் போல ஒழுக்கத்தோடு வாழ்ந்து காட்டுவோம், அவரை உதாரணமாக எடுத்துக் கொள்வோம் என்று புகைப்படத்தைக் காணும் போது எண்ண வேண்டும். பொழுதுபோக்கிற்காக ரஜினியோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும். ரஜினியைப் பின்பற்றி நல்லபடியாக வாழ்வோம் என்பதற்காக இந்த புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
164 படங்களை கடந்து 170, 180, 200, 300 ஆக படங்கள் தொடர வேண்டும் என்று ரஜினியிடம் உங்கள் அனைவரது சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்" என்று பேசினார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.