லீலா.. மலையாளத் தில் 350-க்கும் அதிகமான படங்களில் நடித்தவர். இப் போதும் அங்கு பிஸியாக நடித்து வருபவர். சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘மருது’ படத்தில் ‘அப்பத்தா’வாக வந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் ஒட்டிக்கொண்டுவிட்டார். ‘‘மலையாளத்தில் இதுவரெக்கும் ஞான் காமெடி கேரக்டர்களானு செய்து உள்ளது. தமிழில் ‘மருது’ சினிமாயானு ஞான் முதல்ல சீரியஸ் கேரக்டர்ல நடிச்சது’’ தமிழ் கலந்த மலையாளத்தில் பேசத் தொடங்குகிறார் கொளப்புள்ளி லீலா. அவருடன் ஒரு நேர்காணல்..
‘மருது’ படத்தில் உங்கள் கதாபாத்திரம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறதே?
முத்தையா, விஷால், சூரி மூணு பேரும்தான் அதுக்கு காரணம். அவங்கள என் மகன்கள்னும் சொல்வேன். தெய்வம்னும் சொல்வேன். தமிழ்ல ‘மருது’ எனக்கு ரெண்டாவது படம். முதல்ல ‘கஸ்தூரி மான்’கிற படத்துல நடிச்சிருக்கேன். அதை லோகிததாஸ் இயக்கினார். அதுக்குப் பிறகு தொடர்ந்து மலையாளத்தில் சினிமா, சின்னத்திரையில கவனம் செலுத்துட்டு வந்தேன். ‘கஸ்தூரி மான்’ படத்தை பார்த்துட்டு அவரோட ‘கொம்பன்’ படத்துல நடிக்கவைக்கவே என்னை தேடியிருக்கார். ‘மூணு வருஷமா உங்கள தேடிட்டிருக்கேன். பிடிக்க முடியலை’ன்னு சொன்னார். எப்படியோ ‘மருது’ படத்தப்போ எடிட்டர் ராஜா முகம்மது மூலம் என்னை கண்டுபிடிச்சிட்டார். அப்படித்தான் இந்த படத்துக்குள்ள வந்தேன். நான் மேடை நாடகத்துல இருந்து சினிமாவுக்கு வந்தவள். கடந்த 18 வருஷமா சினிமாவுல இருக்கேன் இப்படி ஒரு ரோலில் நடித்ததே இல்லை. இன்னைக்கு நல்ல அடையாளம் கிடைச்சிருக்கு.
‘மருது’ படப்பிடிப்பில் வசன பேப்பரை நடிகர் சூரி நெத்தியில ஒட்டிப்பார். அதை நீங்க பார்த்து, படிச்சு நடிச்சீங்களாமே?
எனக்கு அவ்வளவா தமிழ் தெரியாது. இப்போதான் கத்துட்டிருக்கேன். சின்ன வசனம்னா கஷ்டப்பட்டு பேசிடுவேன். பெரிய டயலாக்னா அவ்ளோதான். மனப்பாடம் பண்ணவும் முடியாது. மலையாளத்துல எழுதி படிச்சு பார்த்துப்பேன். அப்படி படிக்கும்போது ஒரு வரி டயலாக்கை பேசுறதுக்குள்ள அடுத்த வரி டயலாக் மறந்து போய்டும். அதனால, சூரி வசனம் எழுதின பேப்பரை நெத்தியில ஒட்டிக்கிட்டு கேமராவுக்கு பக்கத்துல நிப்பார். அதை பார்த்து பார்த்து படிச்சிக்கிட்டே நடிப்பேன். தினமும் கஷ்டமா இருந்துச்சு. முத்தையா, விஷால், சூரி இல்லைன்னா நடிச்சிருக்கவே முடியாது.
நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்த உங்களால் மதுரை மண் வாசம் மணக்கும் ‘அப்பத்தா’ கதாபாத்திரத்தை எப்படி ஏற்க முடிந்தது?
நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு அனுபவம் எனக்கு இல்லை. ‘இதுதான் ரோல். இப்படித்தான் நடிக்கணும்’ என்று இயக்குநர் முத்தையா சொல்லிக் கொடுத்தார். மலையாளத்தில் சின்னத்திரை சீரியல்களில் அம்மா, பாட்டி மாதிரி கதாபாத்திரங்கள் நடிச்சிருக்கேன். அது கைகொடுத்தது. எல்லாத்துக்கும் மேல் படப்பிடிப்பில் விஷாலும், சூரியும் என் பேரன்களாகவே மாறினதால நானும் அப்பத்தாவாவே ஆகிட்டேன்.
மலையாளத்தில் சினிமா, சின்னத்திரைன்னு படு பிஸியாக இருக்கிறீர்களே?
மலையாள இயக்குநர் கமல் சார் இயக்கின ‘ஆயல் கத எழுதுகாயினு’ படம்தான் என் முதல் படம். மோகன்லால், நந்தினி (தமிழில் கவுசல்யா) நடிச்ச படம். அங்கே மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, குஞ்சாக்கோ கோபன்னு அத்தனை மலையாள சூப்பர் ஸ்டார்களுடனும் நடிச்சிருக்கேன். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி ரேடியோ நாடகங்கள்ல நடிச்சேன். அதுக்கு பிறகு மேடை நாடகம். அதுல பார்த்துட்டுதான் கமல் சார் என்னை சினிமாவுக்குள்ள கொண்டு வந்தார். இப்போ ‘மருது’ மூலம் தமிழில் அடையாளம் கிடைச்சிருக்கு. சந்தோஷமா இருக்கேன்.
மலையாளத்தில் பல ஆண்டுகளாக நடிக்கும் நீங்கள் தமிழுக்கு வர ஏன் இவ்வளவு தாமதம்?
நீங்க யாரும் என்னை கூப்பிடலை. அதுதான் காரணம். இப்போ ‘மருது’ மூலம் அதுவும் நல்லபடியா நடந்திருக்கு. இயக்குநர் முத்தையாகிட்ட நிறைய தமிழ் இயக்குநர்கள் என் போன் நம்பர் வாங்கி பேசுறாங்க. சீக்கிரமே தமிழ்லயும் பிஸியாகிடுவேன்னு நினைக்கிறேன்.
குடும்பம்?
சொந்த ஊர் காலிகட். கொளப்புள்ளியில் தங்கி ஒரு ரேடியோ நாடகத்தில் நடித்த தால் ‘கொளப்புள்ளி லீலா’ என்ற பெயர். கணவர், 2 மகன்கள் இருந்தனர். அவர்கள் இப்போது உயிரோடு இல்லை. அம்மா மட்டும் உடன் இருக்கிறார். மகன்கள் இல்லாத கவலையை ‘மருது’ படம் மூலமாக விஷாலும், சூரியும் தீர்த்துவைத்தார்கள். அவங்களும் என் மகன்கள்தான்.