தமிழ் சினிமா

மக்கள் சூப்பர் ஸ்டார் சர்ச்சை: மன்னிப்புக் கோரிய இயக்குநர்

ஸ்கிரீனன்

'மக்கள் சூப்பர் ஸ்டார்' பட்டம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு, இயக்குநர் சாய்ரமணி மன்னிப்புக் கோரியுள்ளார்.

சாய்ரமணி இயக்கத்தில் லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'மொட்ட சிவா கெட்ட சிவா' மார்ச் 9-ம் தேதி வெளியாகியுள்ளது. பல்வேறு பிரச்சினைகளை கடந்து வெளியானதால் படக்குழு மகிழ்ச்சியில் இருந்தது.

ஆனால், படத்தின் தலைப்பில் லாரன்ஸ் பெயருக்கு முன்பாக 'மக்கள் சூப்பர் ஸ்டார்' என்ற பட்டம் கொடுத்திருந்தார் இயக்குநர் சாய்ரமணி. இதனால் படக்குழு கடும் சர்ச்சையில் சிக்கியது. சமூகவலைதளத்தில் பலரும் 'மக்கள் சூப்பர் ஸ்டார்' பட்டம் குறித்து விவாதிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில் தற்போது இயக்குநர் சாய்ரமணி, "என் படத்தின் கதாநாயகனான லாரன்ஸின் நற்செயல்களையும், மனித நேயத்தையும் கருத்தில் கொண்டு அவருக்கு 'மக்கள் சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை இப்படத்தில் பயன்படுத்தி இருந்தேன். எங்கள் அன்பின் வெளிப்பாடாக அளித்த இந்தப் பட்டம் அவரை ஆச்சரியப்பட்ட வைக்கவில்லை.

என்னை உடனே கூப்பிட்டு கண்டித்தது மட்டுமல்லாமல், ஊடக நண்பர்களை அழைத்து உலக சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான் என்றும் எனக்கு இந்த பட்டம் வேண்டாம் என்றும் கூறியுள்ளார். படத்திலிருந்து 'மக்கள் சூப்பர் ஸ்டார்' பயன்பாட்டை நீக்குவதற்கான கால அவகாசத்தை கருத்தில் கொண்டு மன்னித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இச்சர்ச்சை குறித்து லாரன்ஸ், "எனக்கு எந்த ஒரு பட்டமும் வேண்டாம். எப்போதும் இந்த உலகத்தில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அது என் தலைவர் ரஜினிகாந்த் மட்டும்தான். அவர்தான் என் குரு, எனக்கு வழிகாட்டி எல்லாமே. எனக்கு இந்த உலகத்திலேயே மிகப் பெரிய பட்டம் என் அம்மாவின் பெயர்தான். அதற்கு நிகராக வேறு எந்த பட்டமும் என்னை திருப்தி படுத்திவிட முடியாது. அதனால் கண்மணி என்ற என் அம்மாவின் பெயரை எனக்கு பட்டமாக நானே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதனால் இனி என் பெயருக்கு முன்னாள் பட்டமாக கண்மணி ராகவா லாரன்ஸ் என்று வைத்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT