இந்திய சினிமா இயக்குநர்கள் பலரும் பணிபுரிய விரும்பும் ஒளிப்பதிவாளர் களில் ஒருவர், சந்தோஷ் சிவன். இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என்று சினிமா உலகில் பல முகங்களை வைத்திருப்பவர். இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான இவரது கேமரா ஒளி ‘துப்பாக்கி’ படத்திற்குப்பின் லிங்குசாமியின் ‘அஞ்சான்’ படத்திற்காக தமிழ்த்திரைப்பக்கம் திரும்பியிருக்கிறது. இலங்கை மண்ணைக் களமாகக்கொண்டு தமிழில் தான் இயக்கியிருக்கும் ‘இனம்’ படத்தை மார்ச் மாதம் ரிலீஸ் செய்வதில் பிஸியாக இருக்கும் இவரை ஒரு காஃபி ஷாப்பில் ‘தி இந்து’ வுக்காக சந்தித்து பேசினோம்.
‘இனம்’ திரைப்படம் வழியே நீங்கள் சொல்ல வரும் விஷயம் என்ன?
சில மாதங்களுக்கு முன் ஒரு தடவை இலங்கைக்கு போயிருந்தேன். அப்போது ஒரு இடத்தில் இரவு உணவு சாப்பிட வேண்டிய சூழல் இருந்தது. அங்கே சந்தித்த ஒருவர் இலங்கை யுத்தத்தில் சிக்கி, பல பிரச்சினைகளை கடந்து வந்தவராக இருந்தார். இதை உடனே அவர் நேரடியாக என்னிடம் சொல்லவில்லை. முதலில் அவரின் கண்கள்தான் சொன்னது. அவரது உணர்வுகள் என்னை பாதித்தது. உடன் இருந்த உறவுகளை பிரிந்து யுத்தத்தை எதிர்கொண்ட வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கூடியவர்கள் இன்று நண்பர்களாகவும் உறவினர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதை யெல்லாம் நாம பதிவு பண்ணாமல் விட்டால் பிறகு யார் செய்யப் போகிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த பாதிப்பை சரிதா, கருணாஸ், சுகந்தா ராம் உள்ளிட்டவர்களை வைத்து 2 மணிநேரத்திற்குள் படமாக எடுத்துள்ளேன். இந்தப் படத்தில் யுத்தம் சார்ந்த எல்லா விஷயங்களும் அடங்கியிருக்கும்.
இந்தப் படத்தை முழுக்க இலங்கையிலேயே படமாக்கியிருக்கிறீர்களா?
கொஞ்சம் இலங்கையில். மீதியை மகாராஷ்டிரா, திருநெல்வேலி, ராமேஸ்வரம், கேரளம் ஆகிய இடங்களில் படமாக்கியிருக்கிறேன்.
‘அஞ்சான்’படம் எப்படி போகிறது?
விஜய், சூர்யா போன்ற நாயகர்கள் வேலையில் ரொம்பவே ஷார்ப். சரியான நேரத்துக்கு வந்து நிற்கிறார்கள். முழு ஆர்வத்தோடு வேலை செய்கிறார்கள். கமிட்டட்டா இருக்காங்க. அதேபோல, ‘அஞ்சான்’ இயக்குநர் லிங்குசாமியின் நட்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவருடைய ஊரான கும்பகோணம் நிச்சயம் போகணும். அவ்வளவு சுவை யான சாப்பாடு அங்கிருந்து ஷூட்டிங்கு வரும். அதுமட்டுமல்ல, அவர் ‘அஞ்சான்’ படத்தின் கதையை நேர்த்தியாக வடிவமைத்திருப்பது ரொம்பவே இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஒரு படத்தை இயக்கும்போது கதை, களம், கேரக்டர் ஆகியவற்றைவிட ஃ ப்ரேம்மின் வொர்க் டோன் மிகையாக இருக்கத்தான் செய்யுமா?
அது நல்ல விஷயம்தானே? விஷுவல் மொழிக்கு ஒரு இலக்கணம் உண்டு. ஒரு எழுத்தாளன், ஒரு இசையமைப்பாளன் எப்படி அவர்களோட வேலைகளை தனி ஈர்ப்போடு முடிக் கிறார்களோ, அப்படித்தான், இங்கும். அந்த விஷுவல் ஐடியாலஜி எல்லாம் ஒரு தனித்திறமைதான். அந்தப்படம் முழுக்க ஒளிப் பதிவாளரோட படமாக இருந்துவிட்டு போகட்டுமே.
அந்த வரிசையில் வந்த ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா, தான் இயக்கிய படங்களில் எல்லாம் ஒரு இயக்குநராகவே தனித்து தெரிந்தாரே?
எல்லோருக்கும் ஒரு வியூ பாய்ண்ட் உண்டு. ஒரு படத்தில் நிலம் கேரக்டராக அமையும். இன்னொரு இடத்தில் மாஸ் ஹீரோ. ரசிகனை கவர்வதற்காக அங்கே ஹீரோ மேல் கவனம் செலுத்தணும். இப்படி ஒவ்வொன் றுக்கும் சரியான காரணம் இருக்கணும். நான் ஆவணப்படங்கள் நிறைய எடுப்பேன். எல்லோரும் கேட்பாங்க. ஏன், நேரடியாக சினிமாவே எடுத்து விடலாமேனு. ஒரு ஆவணப்படத்தை செய்யும்போது அதிலிருந்து நல்ல படம் நமக்கு கிடைக்கும். அது நம்மோட மனதில்தான் உள்ளது. இப்போது உள்ள டிஜிட்டல் உலகில், நானும் ‘அஞ்சான்’ படத்திற்காக ரெட் டிராகன் வரைக்கும் வந்தாச்சு. சின்ன வயதில் படம் வரையும்போது அப்பா சொல்லுவார், இதுதான் ஒரிஜினல் என்று. கொஞ்சம் வளர்ந்து போட்டோகிராஃபி படிக்கும்போது நெகடிவ்தான் ஒரிஜினல்னு பட்டது. இப்போ டிஜிட்டல் வரும்போது காப்பி தான் ஒரிஜினல் என்று நுழைந்துவிட்டது. அப்போ சென்சிபிலிட்டி எல்லாம் இங்கே ஒண்ணுதான். சின்ன வழி என்றால் சைக்கிளில் பயணிக்கப் போகிறோம். கொஞ்சம் பெரிய வழி என்றால் கார் மாதிரியான வாகனத்தில் பயணிக்கப்போகிறோம். அவ்வளவுதான். இந்த டிஜிட்டல், ரெட் டிராகன் எல்லாம் அப்படித்தான். வாய்ப்புகளும் வழிகளும் எல்லா விதத்திலும் இருக்கத்தான் செய்யும்.
பத்ம விருதுக்கு பின் எப்படி உணர்கிறீர்கள்?
விருதுக்காக இங்கே நாம் மாற முடியாது. அதேபோல நம்மோட கூர்மையான பார்வையிலும் எண்ணத் திலும் எந்த மாற்றமும் இருக்கப்போவ தில்லை. ஒரே விஷயம், விதவிதமான மக்களோட பாராட்டுகள் கிடைக்கும்.
நீங்கள் ஒளிப்பதிவு செய்த ‘ரோஜா’ படத்தின் வழியே அறிமுகமான இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் வளர்ச்சி, பணிகளை எப்படி இப்போது எப்படி பார்க்கிறீர்கள்?
அவர் கொஞ்சமும் மாறலை (சிரிப்புடன்...) அன்னைக்கும் நேரத்துக்கு பாட்டுக் கொடுக்கமாட்டார். இப்பவும் நேரத்துக்கு கொடுக்க மாட்டேங்குறார். அன்னைக்கு திலீப்பாக இருந்தார். இன்னைக்கு ஏ.ஆர்.ரஹ்மானாக இருக்கிறார்.
மியூசிக் ஹார்ட் பீட்டோட தொடங்குகிற விஷயம். அவ்வளவு எளிதானது அல்ல. விஷுவல் எல்லாம் நாம பிறந்து, பின் பார்த்து, பழகி கற்றுக்கொள்கிறோம். இசை அப்படி இல்லை. தனி கிரியேட்டிவிட்டி. எல்லோருக்கும் அந்த பரிசு கிடைக்காது. அதில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நல்ல ரீச்.
‘இனம்’ ‘அஞ்சான்’ அடுத்து?
அடுத்து ஒரு படம் இயக்கத் திட்டமிட்டுள்ளேன். அது தமிழ் அல்லது ஹிந்தி மொழியில் அமையலாம். எது செய்தாலும் போர் அடிச்சிடக்கூடாது.