ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் முதல் நாள் பேசிய ரஜினிகாந்த், "அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது" என்று பேசினார். இறுதி நாள் புகைப்படம் எடுக்கும் நிகழ்வில், "போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்" என்று அரசியலுக்கு வருவது குறித்து சூசமாக தெரிவித்தார்.
ரஜினியின் இந்தப் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். பாஜக தலைவர்கள் பலரும் "பாஜகவில் இணைய ரஜினிகாந்தை வரவேற்கிறோம்; அவருக்கு உரிய இடம் வைத்திருக்கிறோம்" என்று தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ரேடியோவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தான் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"நான் ஒரு ரஜினி ரசிகன். சிறு வயதிலிருந்தே 'தளபதி' படத்திலிருந்து என்னை பள்ளிக்கு விடுமுறை எடுக்க வைத்து முதல் நாள் முதல் காட்சிக்கு எல்லாம் அம்மா அழைத்துச் சென்றுள்ளார். 'கபாலி' வரைக்குமே முதல் நாள் முதல் காட்சி தான் பார்த்துள்ளேன்.
சூப்பர் ஸ்டார் முதலமைச்சராகி விட்டால் தமிழ்நாட்டு முழுமையாக மாறிவிடும் என சிறுவயதில் நினைத்ததுண்டு. 'முதல்வன்' படம் பார்த்துவிட்டு, இந்தப் படத்தில் ரஜினி நடித்திருக்கலாமே என ஏங்கினேன். அவர் நடிக்க வேண்டிய படம், ஆனால் ஏன் நடிக்கவில்லை என்பது அப்புறமாக தான் தெரிந்தது.
'பாபா' படத்தில் வரும் பாட்டை பார்த்துவிட்டு, ரஜினி அரசியலுக்கு வந்து நல்லது செய்வார் என நினைத்தேன். ஏனென்றால் ரஜினி மிகவும் நல்லவர் என என் மனதில் பதிந்துவிட்டது. எனக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பலருக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது.
ரசிகர்கள் சந்திப்பின் போது 'கடவுள் மனது வைத்தால் அரசியலுக்கு வருவேன்' என்று பேசினார். இப்போது என் மகனுக்கு 5 வயதாகிறது. 25 வருடங்களாக ரஜினி அரசியலுக்கு வருவார் என காத்திருந்துவிட்டேன். இப்போது எனக்கு பொறுமை போய்விட்டது.
நான் ரஜினி மன்றத்தில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், ரஜின் ரசிகன் தான். அனைத்து படங்களையும் முதல் நாள் பார்த்துள்ளேன். ரஜினி இனிமேல் அரசியலுக்கு வந்து மாற்றம் வருமா என்ற நம்பிக்கை போய்விட்டது. இனிமேலும் அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும். நிறைய படங்களில் நடிக்க வேண்டும்.
இதற்கு மேல் அரசியலில் எங்களுக்கான திட்டங்களை அவரிடம் என்ன எதிர்பார்க்க முடியும் என தெரியவில்லை. ரஜினி சார் இதற்கு மேல் எத்தனை படங்கள் நடித்தாலும், முதல் நாள் முதல் காட்சி போய் பார்ப்பேன். தற்போது அரசியலுக்கு வந்தால் தலைவர் என்ற உத்வேகம் அளிக்குமா என தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.