நேரம் கூடிவரும் போது சந்திப்போம் என இலங்கை மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
ஞானம் அறக்கட்டளை சார்பில் இலங்கையில் மக்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டு வீடுகளை வழங்குவதாக இருந்தது. ஆனால், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்க அப்பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
ரஜினியின் இலங்கை பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த திருமாவளவன் மற்றும் வேல்முருகன் ஆகியோரைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், தனியார் தொலைக்காட்சியில் வேல்முருகன் தெரிவித்த கருத்துக்களுக்கு மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடுத்துள்ளது லைகா நிறுவனம்.
இந்நிலையில் இலங்கை மக்களுக்கு ரஜினிகாந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.
நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும். நேரம் கூடிவரும் போது சந்திப்போம். நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார் ரஜினி.