அஜித் - விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் உருவான பில்லா ரீமேக், வசூலில் சாதனை படைத்த படம். இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்தால் எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும்.
அஜித் இந்தப் படத்தின் தல என்றால் தளபதி போல இன்னொரு முன்னணி நாயகன் ஆர்யா. அஜித்துக்கு நயன்தாராவும், ஆர்யாவுக்கு டாப்ஸியும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். அஜித் தனது முந்தைய படங்களை விட அதிக கவனம் செலுத்தியிருக்கும் படம். மும்மை துறைமுகப் பகுதியில் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சியில், அஜித் தனக்கு பதிலி(டூப்) பயன்படுத்தாமல் அவரே நடித்ததில், ஜீப் மோதி காலில் பலத்த காயம் ஏற்பட்டதாம். அடுத்த நாள், எப்படியும் படபிடிப்பு ரத்தாகும் என்றுதான் படக்குழுவினர் எதிர்பார்த்திருக்கிறார்கள். மாறாக, காலில் கட்டுப்போட்டுக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து நின்றிருக்கிறார் அஜித். இதற்காக வரும் நவம்பர் மாத இறுதியில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருக்கிறார். அதேபோல துபாயில் படமாக்கப்பட்ட அஜித்தின் மோட்டர் சைக்கிள் அதிவேகத் துரத்தல் காட்சிகளிலும் அஜித்தின் வேகம் தீபொறி பறக்கும் என்கிறார்கள்.
ஆரம்பம் படத்தின் கதை பரம ரகசியமாக இருந்தாலும், கௌதம் மேனன் படத்தில் துப்பறியும் ஆனந்தாக நடிக்க மறுத்தவர் ஆரம்பம் படத்தில் துப்பறியும் காவல் அதிகாரியாக வருகிறாராம். ஒரு தொழில் நிறுவனத்தின் சைபர் க்ரைம் வழக்கை விசாரிக்கச் செல்லும் அஜித், அதற்காக கம்ப்யூட்டர் வல்லுனர் ஆர்யா உதவியை நாடுகிறார். ஆனால் ஆர்யாதான் அந்த குற்றத்தின் ஆரம்பப்புள்ளி என்று தெரியவர அதிர்ந்து போவாராம் அஜித். பிறகு ஆர்யாவையே ஆட்டிப்படைக்கும் அந்த மாய வில்லனோடு மோதும் அஜித், ஆர்யாவையும் தனது ஆக்ஷன் வேட்டையில் சேர்ந்துக்கொள்வதுதான் எதிர்பாராத திருப்பம் என்கிறார்கள். ''அஜித் நடித்திருக்கும் யதார்த்த காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்படும்!'' என்கிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன். நயன்தாரா அதிரடியான சண்டைக் காட்சி ஒன்றில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம். நடிகை தப்ஸி பத்திரிகை நிருபராக வருகிறார். இதில் ஆர்யா - டாப்சி இடையிலான காதல் காட்சிகளுக்கு திரையரங்கில் அணல் பரவும் என்கிறார்கள். கடைசியாக வெளியான ஆரம்பம் முன்னோட்டக் காட்சிகளை பார்க்கும்போது விஷ்ணுவர்தன் அஜித் ரசிகர்களை ஏமாற்றாமல் கொடுத்திருப்பார் என்றே தோன்றுகிறது.
ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தை பொள்ளாச்சி, கும்பகோணம், பழனி ஆகிய நடுத்தர நரங்களில் படமாக்கியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் 80களின் பின்னணியில் படமாக்கப்பட்ட 20 நிமிடக் காட்சிகள் பெரும் வரவேற்பை பெறும் என்கிறார்கள். பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை போன்ற படங்களில் வெவ்வேறு கதைக்களங்களில் கார்த்திக் ஆக்ஷன் ஆட்டம் ஆடியிருந்தாலும் இந்தப் படத்தில் அவரது நடிப்பு புதிய பயணத்தை தொடர வழி வகுக்கும் என்கிறார்கள். சலிப்பூட்டும் வசனங்களை தொடர்கிறார் என்கிற விமர்சனத்தை உடைக்கவே காமெடிக் காட்சிகளில் வசனங்களை குறைத்துக்கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தியிருக்கிறாராம் சந்தானம்.
அன்பான அப்பா அம்மாவாக பிரபு - சரண்யா பொன்வண்ணன். இவர்களது ஒரே மகனுக்கு ஊரெல்லாம் அலசி காஜல் அகர்வாலை மணம்முடிக்கிறார்கள். காஜல் கார்த்தி குடும்பத்தில் நுழைந்த பிறகு ஏற்படும் குழப்பம் நகைச்சுவை அமளியாகிறது. குடும்பத்துக்கு கௌரவம்தான் முக்கியம் எனும் சிறுநகர வாழ்க்கையில் இருக்கும் சந்தோஷங்களும், அதற்காக அவர்கள் தாங்கிக்கொள்ளும் சின்னச் சின்ன வலிகளும்தான் கதை என்கிறார்கள். என்றாலும் கார்த்திக்கு இதில் ஆக்ஷன் இருக்கவே செய்கிறது. ஆனால் அலெக்ஸ் பாண்டியன் அளவுக்கு மசாலா இல்லையாம்.
''இனி வரும் படங்களில் காமெடி படங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம்!'' என்று கூறும் அளவுக்கு காஜல் அகர்வாலுக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும் படம் . ''இந்த படத்தில் புகைப்பிடிக்கும் காட்சி முற்றிலும் இல்லை. அதேபோல என்னுடைய அடுத்த படங்களிலும் அந்த காட்சியை வைக்க மாட்டேன்!'' என்று இசை வெளியீட்டு விழாவிலேயே உறுதிமொழி எடுத்திருக்கும் இயக்குநர் ராஜேஷ் தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். நான்காவதாகவும் சொல்லி அடிப்பார் என்கிறார்கள்.
விஷாலுக்கு பாண்டிய நாட்டின் கதைக்களம் புதிதல்ல என்றாலும், மதுரை வாழ்க்கையை முன்னிலைப்படுத்தும் இந்தப் படத்தில் விஷாலை இன்னொரு சண்டைக்கோழியாகப் பார்க்கலாம் என்கிறார்கள்.
ஆக பாண்டி நாட்டு அழகுராஜாவின் ஆட்டம் தீபாவளி தினத்தில் அமர்க்களமான ஆரம்பம்.