மீண்டும் சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் படத்துக்கு 'டிக்:டிக்:டிக்' என பெயரிட்டு இருக்கிறார்கள்.
சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான படம் 'மிருதன்'. மைக்கேல் ராயப்பன் தயாரித்த இப்படத்தை ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டது. வசூல் ரீதியில் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தமானார். இப்படத்தை ஜெபக் தயாரிக்க முன்வந்தார். இப்படத்தில் ஜெயம் ரவி உடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டன.
இப்படத்துக்கு 'டிக்:டிக்:டிக்' என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் 'டிக் டிக் டிக்'. அப்படத்தின் தயாரிப்பாளரிடமிருந்து அதிகாரப்பூர்வமாக தலைப்பை வாங்கி, தங்களது படத்துக்கு வைத்திருக்கிறார்கள்.
தமிழில் தயாராகும் முதல் விண்வெளி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்புக்காக சென்னையில் பெரிய அரங்கு ஒன்றை அமைத்து பெரும்பாலான காட்சிகள் அதற்குள் காட்சிப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
லட்சுமண் இயக்கத்தில் 'போகன்' படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி, அதனைத் தொடர்ந்து 'டிக்:டிக்:டிக்' படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார்.