தமிழ் சினிமா

மணிரத்னம் படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு முக்கிய கதாபாத்திரம்

ஸ்கிரீனன்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்.ஜே.பாலாஜி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிதி ராவ் நாயகியாக நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

இப்படத்தின் கதாபாத்திரத்துக்காக கார்த்தி உடலைக் குறைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கமாக ஊட்டியில் ஒரு பாடலை படமாக்க இருக்கிறார்கள். இவ்வருட இறுதியில் படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. "உண்மையில் நடந்திருக்கிறது. அவருடைய படங்கள் பார்த்து வளர்ந்தேன், தற்போது மணிரத்னம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன். கனவுப் போல இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.

இப்படத்துக்கு இயக்குநர் மணிரத்னம் "காற்று வெளியிடை" என்று பெயரிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் படக்குழு இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

          
SCROLL FOR NEXT