தமிழ் சினிமா

ஜீவாவுடன் நடிக்க விரும்பினேன் : துளசி

மகராசன் மோகன்

சிரிப்பைச் சில்லறைகளைப் போலச் சிதறவிடுகிறார், துளசி. இயக்குநர் மணிரத்னத்தை அடுத்து இந்த ‘கடல்’ புறாவைக் குறிவைத்துத் தான் இயக்கும் ‘யான்’ படத்தில் நாயகியாகியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் ரவி.கே. சந்திரன்.

‘‘ராதா அம்மா என் ஃபிரண்ட். அம்பிகா அம்மா என் திக் ஃபிரண்ட். கார்த்திகா, என் திக்திக் ஃபிரண்ட்!’’ குடும்பத்தின் பாச மணம் வீசப் பேசத் தொடங்கினார் துளசி.

16 வயது. கனவுகள் பூக்கும் வயசாச்சே? துளசிக்கும் ஏகப்பட்ட கனவுகள் நிச்சயம் பூத்திருக்குமே?

ரவி சார், இயக்கத்தில் ஜீவாவோட சேர்ந்து நடிக்கிற ‘யான்’ படத்தோட இந்த வாய்ப்புதான் இப்போ என் பெரிய கனவு, சந்தோஷம் எல்லாமும். படம் 75 சதவீதம் முடிந்தது. நாயகிக்கு ரொம்பவே முக்கியத்துவம் உள்ள கேரக்டர். மும்பையில் வசிக்கும் பெண்ணாக நடிக்கிறேன். என் கேரக்டர் பயணிக்கிற விஷயங்கள் பற்றி அவ்வளவு சொல்லியிருக்கிறார் இயக்குநர். ரெண்டாவது படத்திலயே இவ்ளோ பவர்ஃபுல் ரோல். ரவி சாரோட படம் என்பதால் கேமரா பத்தி கவலையே இல்லை.

ஜீவா?

நல்ல மனிதர். நடிப்பு பற்றி நிறையப் பகிர்ந்துப்பார். அவரோட படங்கள் எல்லாம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். செலக்டிவா கதைகளைத் தேர்வு செய்கிறவர். அக்கா கார்த்திகா, ஜீவாகூட நடித்திருப்பதால் எனக்கு எந்தப் பயமும் இல்லை. அவரும் ஃபிரண்ட்லியா அவ்ளோ விஷயங்கள் சொல்லுவார். அவரோட ஒரு படத்துலயாவது நடிக்கணும்னு விரும்பினேன். அது இத்தனை சீக்கிரம் அமையும்னு எதிர்பார்க்கல!

அதேபோல, நாசர், பிரகாஷ்ராஜ் என்று சீனியர் நடிகர்களோட நடிக்க வாய்ப்பு அமைந்தது. படத்தின் இயக்குநர் கிட்டயும், அந்தப் படத்தில் நடிக்கும் சீனியர் நடிகர்கள் கிட்டயும் ஆலோசனை களைக் கேட்டுத்தான் நடிக்கணும்னு அம்மா அடிக்கடி சொல்லு வாங்க. சீனியர் ஆர்டிஸ்ட்தான் என் குரு. படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் பத்தியும் சொல்லியே ஆகணும். மாடர்ன் அண்ட் பியூட்டி கொஞ்சமும் குறையாத இசையைக் கொடுப்பவர். இந்தப் படமும் அப்படித்தான் வந்திருக்கு.

அடுத்த வருஷம் பிளஸ் டூ. இப்போ இருந்தே நிறைய ஹோம் வொர்க் எல்லாம் இருக்குமே?

நடிப்பைப் போல, படிப்பும் எனக்கு அவ்ளோ பிடிக்கும். கண்டிப்பா எப்பவுமே படிப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன். பத்தாம் வகுப்பு தேர்வுகள் எல்லாம் முடித்த பிறகுதான் ‘யான்’ படத்தோட படப்பிடிப்பு ஆரம்பிச்சது. நான் அதை ரொம்பவே அதிர்ஷ்டமா நினைச்சேன்.

தமிழ்ப் படங்களை மிஸ் பண்ணாம பார்த்துடுவீங்களா?

கண்டிப்பா. மும்பையில் இருந்தாலும், தமிழ்ப் படங்கள் மீதுதான் கொள்ளைப் பிரியம். தமிழ்லதான் வில்லேஜ் கேரக்டர், நடுத்தரக்குடும்பம், மாடர்ன் கேர்ள் இப்படி விதவிதமான படங்கள் நிறைய தொடர்ச்சியா பார்க்க முடியுது. இந்தக் கேரக்டர்ல எல்லாம் நாமும் நடிக்கணும் என்கிற ஆசையை உண்டாக்குற படங்கள் இங்கு அதிகம். அதை எப்படி மிஸ் பண்ணத் தோணும்.

உங்களோட நடிப்புக்கு அக்கா கார்த்திகா எவ்ளோ மார்க் போடுறாங்க?

ரொம்பவே பாராட்டுவா. இப்போ உள்ள டிரெண்டுக்கான டிப்ஸ் நிறையக் கொடுப்பா. நடிப்புக்காகக் கார்த்திகா எவ்ளோ உழைக்குறா என்பதை நான் நடிக்க வந்த பிறகுதான் தெரிஞ்சிக் கிட்டேன். அவளோட படத்தைப் பார்த்து நானும் விமர்சனம் சொல் லணும்னு விரும்புவா. கார்த்திகாவோட படங்கள் வந்தா, என்னோட நண்பர்களை எல்லாம் அழைச்சுக்கிட்டு போய் ஒரு ரசிகையா படம் பார்ப்பேன். அப்படி ஒரு பிரண்ட்ஷிப் எங்களோடது.

‘யான்’ படத்தில் முதலில் காஜல் அகர்வால்தான் நடிப்பதா இருந்ததாமே?

அது எனக்குத் தெரியாது. ஒரு படத்தைத் தொடங்குவதற்கு முன் நிறைய ஆர்ட்டிஸ் செலக்ஷன் திட்டத்தோடத்தானே ஆரம்பிப்பாக்க. ஒருவேளை இருந்திருக்கலாம். அவங்களும் முன்னணி நடிகைகளில் ஒருத்தங்க. அவங்க நடிக்க இருந்த ரோலா இருந்தாலும் அதில் நடிப்பது சந்தோஷம்தானே.’’

அடுத்த படம்?

அது எனக்குத் தெரியாது. நான் நடிக்கும் படத்தைத் தேர்வு செய்வது அம்மாதான். அடுத்தடுத்த படங்களுக்குக்கான கதைகளை அவங்க கேட்டுக்கொண்டிருப்பாங்க என்று நினைக்கிறேன்.

SCROLL FOR NEXT