தமிழனாக இருந்தால் 'வனமகன்' படத்தை இணையத்தில் போடாதீர்கள் என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்.
விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா, தம்பி ராமையா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'வனமகன்'. ஜூன் 23-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை விஜய் தயாரித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.
'வனமகன்' படக்குழுவினர் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் ஜெயம் ரவி பேசியதாவது:
"கதை மேல் நம்பிக்கை வைத்து இப்படத்துக்கு உழைத்த நல்ல கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பால் மட்டுமே இப்படம் உருவாகியுள்ளது. நான் மட்டும் எளிதாக வேலை செய்தேன் என்று சொல்வதெல்லாம் சுத்த பொய். அவர் மூளையை கசக்கி மிகவும் கஷ்டப்பட்டு தான் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
என் படத்தில் அறிமுகமானால் பெரிய நாயகியாக ஆகிவிடுவார்கள் என சொல்வார்கள். நிச்சயமாக சாயிஷா பெரிய நாயகியாக ஆகிவிடுவார். விஜய் மாதிரி சினிமாவை மிகவும் நேசிக்கும் ஒருவரால் மட்டுமே இந்த மாதிரியான படத்தை எடுக்க முடியும்.
இப்படம் ஒரு நல்ல விஷயத்தை மிகவும் அழுத்தமாக சொல்லியிருக்கிறது. கூட்டுக் குடும்பமாக வாழும் மலை சார்ந்த மக்களைப் பற்றிய படம் இது. உண்மையாக உழைத்து இப்படத்தை எடுத்துள்ளோம். தமிழனாக இருந்தால் இப்படத்தை இணையத்தில் போடாதீர்கள்.
விஜய் இப்படத்துக்காக போட்ட பணத்தை நிச்சயமாக இந்தப் படம் திரும்ப எடுக்கும். அப்படிப் படம் ஒடவில்லை என்றால், சம்பளம் வாங்காமல் விஜய்க்கு ஒரு படம் செய்து கொடுக்கிறேன்'' என்று பேசினார் ஜெயம் ரவி.