தனது பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்து வருவதாக இயக்குநர் பாண்டிராஜ் புகார் அளித்திருக்கிறார்.
பாண்டிராஜ் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் புதுமுக நடிகர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறி பல பேர் மோசடி செய்து வருகிறார்களாம். இச்செய்தி இயக்குநர் பாண்டிராஜிற்கு தெரிந்தவுடன் விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார்.
அப்புகார் தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பது :
“சமீப நாட்களாக சில ஏமாற்றுப் பேர்வழிகள், என் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்து வருகின்றனர். நான் அடுத்து இயக்கப்போகும் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லியும், குறிப்பாக குழந்தை நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு தருவதாக சொல்லியும், அதுவும் நான் இயக்குநர் பாண்டிராஜ் அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன் என்று கூறி ஏமாற்றி வருகின்றனர். சினிமாவில் நடிப்பதற்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகவேண்டும் என்றும் அதற்கான உறுப்பினர் அட்டையை அவர்களே வாங்கித் தருவதாகவும் கூறி அதற்காக 49,000 ரூபாய் பணம் போட ஒரு வங்கி கணக்கு எண்ணை கொடுப்பதாக தகவல் வந்துள்ளது.
இதுமுற்றிலும் பொய்யானது. இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். என்னுடைய எல்லாப் படங்களிலும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது வழக்கம். அப்படி வாய்ப்பு கொடுத்தாலும் கூட அவர்களை என் அலுவலகத்திற்கு நேரடியாக வரவழைத்துதான் பேசுவேன். தொலைபேசி மூலமாகவோ, அல்லது யாரேனும் இடைத்தரகர்கள் மூலமாகவோ நான் யாருக்கும் வாய்ப்பு தருவதாக கூறுவதில்லை.
சினிமா என்கிற இந்த கலை உலகை நோக்கி பலரும் கனவுகளுடன் வருகின்றனர். ஆனால் அவர்களுடைய கனவை சிதைக்கும்படி இங்கு பல ஏமாற்றுக்காரார்கள், ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர். சினிமா என்று வருகிறபோது யாரும் யோசிப்பதேயில்லை. என் பெயரை மட்டுமில்லாமல் இதே போல் சினிமாத் துறையில் உள்ள பிரபலமானவர்கள் பெயரைப் பயன்படுத்தி வாய்ப்பு தருவதாக சொல்லி ஏமாற்றுகின்றனர். அதை நம்பி யாரும் ஏமாறாதீர்கள்.
என் பெயருக்கும், என்னுடைய 'பசங்க புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதை செய்து வருகின்றனர். அதனால் யாரும் ஏமாற்றபட்டு விடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் இதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.