தமிழ் சினிமா

காதலிக்காதவர்களிடம் பத்திரமாக இருக்கிறது காதல்!

திரை பாரதி

வானம்பாடிகளின் மரபில் தொடர்ச்சியாக எழுதிவரும் கவிஞர்களில் ஒருவர் நாஞ்சில். பி..சி. அன்பழகன். முரளி - லைலா நடித்த ’காமராசு’ படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் அறிமுகமான இவர், இலக்கியம், சினிமா இரண்டுக்கும் வெளியே அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ மேடைப் பேச்சாளராகவும் வலம் வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதுமுகங்களை வைத்து ’நதிகள் நனைவதில்லை’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். ‘காதல் இல்லாமல் இன்று சினிமா இல்லை. ஆனால் பெரும்பான்மை படங்கள் காட்டும் காதலுக்கும், யதார்த்த வாழ்வின் காதலுக்கும் காத தூரம் இடைவெளி இருக்கிறது. படித்துவிட்டு வேலை தேடும் நேரத்தில், காதலைப் படிக்க நினைக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை யதார்த்தக் களத்தில் நின்று காதலின் துடிப்பான தருணங்களைச் சொல்லும் படம் இது’ என்று பேச ஆரம்பித்தவரிடம் படத்தின் நாயகி படப்பிடிப்பிலிருந்து எஸ்கேப்பான விவகாரத்திலிருந்து பேட்டியைத் தொடங்கினோம்.

அஜித்தின் பில்லா 2 படநாயகி பார்வதி ஓமக்குட்டன் உங்கள் படத்திலிருந்து வெளியேறியது பரபரப்பான செய்தியானதே?

ஆமாம்! பில்லா 2 படத்துக்குப் பிறகு பார்வதி பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். குமரி மாவட்டப் பெண்ணாக நடிக்க அவர் சரியாக இருப்பார் என்பதாலும், அஜித்தின் நாயகியாக நடித்தவர் என்பதால், படத்துக்குக் கூடுதல் கவனம் கிடைக்குமே என்ற எண்ணத்தோடும், முழு திரைக்கதையை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவருக்குக் கொடுத்தேன். திரைக்கதையைப் படித்து விட்டுப் புகழ்ந்தார். கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் கூறினார். பிறகு படத்தில் இடம்பெறும் பாடல்களைக் கொண்டு வாருங்கள் என்றார். எனக்கு ஆச்சரியம். படப்பிடிப்புக்கு ஒரு மாதம் முன்பாகவே பாடல்களை ஒலிப்பதிவு செய்துவிட்டோம். இதனால் அவரது கோரிக்கையை உடனே நிறைவேற்றினேன். சௌந்தர்யன் இசையில், ஜேசுதாஸ் –வசுந்தராதாஸ் பாடிய பாடல்களைக் கேட்டு, இசையமைப்பாளரை என் முன்பாகவே போன் செய்து பாராட்டினார். பிறகு சம்பளம் பேசினார். 15 லட்சத்துக்கு ஒப்புக்கொண்டார். 5 லட்சம் முன்பணம் கேட்டார். ஒரு லட்சம் முன்பணம் தருகிறேன் என்றேன். இல்லை 5 லட்சம் முதலில் வேண்டும் என்றார். எனக்கு எங்கோ இடித்தது. இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பிறகு நீங்கள் கேட்ட முன்பணத்தைத் தருகிறேன் என்றேன்.சரி என்றார். மொத்தப் படக்குழுவும் அவருக்காகக் காத்திருந்தபோது, நான் வர முடியாது என்று தொலைபேசியில் கூப்பிட்டுச் சொன்னார். காரணம் கேட்டபோது அஜித்துடன் நடித்துவிட்டுப் புதுமுக ஹீரோவுடன் நடிக்க வேண்டுமா என்று கேட்கிறார்கள். என்றார். அஜித் மட்டுமல்ல, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சூப்பர் ஸ்டார் ரஜினி உட்பட இன்று திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும்

அத்தனை பேருமே புதுமுகமாகத் திரை வாழ்க்கையைத் தொடங்கியவர்கள்தானே என்றேன். கடைசி நேரத்தில் சொல்வதற்கு மன்னியுங்கள் என்றார். மன்னிப்பு கேட்ட பிறகு அவரைக் கடிந்துகொள்ள மனமில்லை. பார்வதியின் கதாபாத்திரத்தை, அழகி படத்தின் நாயகி மோனிக்கா நிரப்பியிருக்கிறார்.

என்ன கதை?

பிள்ளைகள் நல்ல படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆவலுடன், அவர்கள் படித்து முடிக்கும்வரை காத்திருக்கிறார்கள் பெற்றோர். ஆனால் படிப்பு முடித்ததும் நல்ல வேலையில் அமர அவர்களுக்கு அவகாசம் கொடுப்பதில்லை. வேலை தேடும் இந்த இக்கட்டான நேரத்தில் காதல் வந்துவிட்டால், இளைஞர்கள் சந்திக்கும் நெருக்கடியில், தேர்க் காலில் சிக்கிய ரோஜாச் செடிபோலக் காதல் நசுங்கிவிடுகிறது. காதலித்தவர்களைவிடக் காதலிக்காதவர்களிடம்தான் காதல் பத்திரமாக இருக்கிறது. ஜெயராம், சுசிலா, உன்னி ஆகிய மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றிய இளமைப் போராட்டம்தான் இந்தப் படம். இதில் தந்தைக்கும் மகனுக்குமான உணர்வுப் போராட்டம் நாஞ்சில் நாட்டு மண் வாசனையுடன் இருக்கும். கதையின் நாயகனாக பிரணவ் என்ற இளைஞரை அறிமுகப்படுத்துகிறேன்.

காமராசு படம் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஏன் இத்தனை இடைவெளி?

இரண்டே காரணங்கள்தான். தமிழ் சினிமாவில் உடல் உறுப்பு தானத்தைக் கருவாகக் கொண்டு வெளிவந்த முதல் படம் காமராசுதான். ஆனால் ஏனோ விமர்சகர்கள் அப்போது எனது படத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் ’சென்னையில் ஒரு நாள்’ படத்தைக் கொண்டாடிவிட்டார்கள். நல்ல முயற்சிகள் வரும்போது தனித்த பாராட்டும் ஊக்குவிப்பும் கிடைத்தால்தான் என்னைப் போன்றவர்கள் உற்சாகமாக அடுத்த முயற்சியைத் தொடர முடியும். என்றாலும் எனது இரண்டாவது படமாகக் குமரி மாவட்டத்தில் வாழ்ந்து மறைந்த ஆன்மிக வழிகாட்டியான வைகுண்டசாமியின் வாழ்க்கை வரலாற்றை ‘அய்யா வழி’ என்ற தலைப்பில் படமாக இயக்கித் தயாரித்தேன். அப்போதுதான் ஒரு தயாரிப்பாளரின் வலி என்ன என்பதைத் தெரிந்துகொண்டேன். அந்தப் படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. பொழுதுபோக்குப் படங்கள்தான் தமிழ் சினிமா என்ற நிலை உருவாகிவிட்டதால், நானும் பொழுதுபோக்குடன் வாழ்க்கையைச் சொல்ல வந்திருக்கிறேன். இந்த முறை என் படத்தைப் பார்க்கும் எந்தத் திரையரங்க உரிமையாளரும் உங்களுக்குத் தியேட்டர் கிடையாது என்று சொல்ல மாட்டார்கள்.

படத்தில் வேறு என்ன ஹைலைட்?

கதையோடு சேர்த்து, கதைக்களமும் ஒளிப்பதிவும் கண்டிப்பாகப் பேசப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. காரணம், குமரி மாவட்டத்தை முழுமையாகப் படம்பிடித்தவர்கள், நமது பாரதிராஜாவும் லெனின் ராஜேந்திரன், பரதன், அரவிந்தன் போன்ற மலையாள இயக்குனர்களும்தான். இவர்களுக்குப் பிறகு மொத்தப் படத்தையும் குமரி மாவட்டத்தில் படம்பிடித்திருக்கிறேன். சினிமா படப்பிடிப்புக்கு ஏற்ற ஆறு வகை நிலங்களும் இங்குதான் இருக்கின்றன. இதனால்தான் இந்த மாவட்டத்தை பாரதிராஜாவும், மலையாள சினிமா உலகினரும் இன்னும் காதலிக்கிறார்கள்.

SCROLL FOR NEXT