தமிழ் சினிமா

பாலா பட நாயகியாக ஒப்பந்தமாவாரா ஸ்ரேயா?

ஸ்கிரீனன்

பாலா - சசிகுமார் இணையும் படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி விட வேண்டும் என்று ஆர்வத்துடன் இருக்கிறார் ஸ்ரேயா.

ரஜினி நடிப்பில் வெளியான 'சிவாஜி' படத்தில் நாயகியாக நடித்தவர் ஸ்ரேயா. ரஜினிக்கு ஜோடியாக நடித்ததால் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.

விஜய், விக்ரம், தனுஷ், ஜீவா என தமிழ் திரையுலகம் மட்டுமன்றி, தெலுங்கிலும் பெரிய நாயகர்களுடன் நடித்து வந்தார். கால்ஷீட் தேதிகள் ஒதுக்க முடியாதளவிற்கு பிஸியான நடிகையாக வலம் வந்தார். தற்போது பல்வேறு நடிகைகளின் வரவால், ஸ்ரேயாவின் மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. பேஷன் ஷோக்களில் வலம் வர ஆரம்பித்தார்.

கடைசியாக ஜீவா ஜோடியாக நடித்த ‘ரௌத்திரம்’ படம் 2011ல் வந்தது. அதே வருடம் ராஜபாட்டை படத்தில் விக்ரமுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். அதன் பிறகு தமிழில் நடிக்கவில்லை. சமீபத்தில் கன்னடத்தில் நடித்த 'சந்திரா' படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர்.

தற்போது பாலா அடுத்து இயக்கவிருக்கும் படம் கரகாட்டக் கலையைக் பின்புலமாக கொண்டது என்பதால் நல்ல நடனமாடத் தெரிந்த ஒருவரை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார்கள்.

ஸ்ரேயாவிற்கு நன்றாக நடனமாடத் தெரியும் என்பதால் அவரை அழைத்த பாலா ஒரு டெஸ்ட் ஷுட் எடுத்து விட்டு அனுப்பியிருக்கிறார். இன்னும் முறையாக ஸ்ரேயாவை படத்திற்கு ஒப்பந்தம் செய்யவில்லை.

இதனால், ஸ்ரேயா எப்படியாவது பாலா படத்தில் நடித்து அதன் மூலம் சரிந்த மார்கெட்டை தூக்கி நிறுத்த வேண்டும் என்று ஆர்வத்துடன் காத்திருக்கிறார்.

SCROLL FOR NEXT