தமிழ் சினிமா

ரஜினிக்கு ஒரு வில்லன் போதாது: கிஷோர் பகிரும் கபாலி அனுபவம்

செய்திப்பிரிவு

'கபாலி' மலேசிய நிழல் உலகத்தைப் பற்றிய கதை. மலேசியாவின் சமூக - அரசியல் மற்றும் பொருளாதார வரலாறு படக் களத்தின் ஓர் அங்கமாக இருக்கும் என நடிகர் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள படம் 'கபாலி'. ராதிகா ஆப்தே, கலையரசன், ரித்விகா, கிஷோர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கபாலி படத்தில் மூன்று வில்லன்களில் ஒருவராக நடித்துள்ள கிஷோர் பேசுகையில், "இது மலேசிய நிழல் உலக தாதாக்களைப் பற்றிய கதை. கதைக் களத்தில், மலேசியாவின் சமூக - அரசியல் மற்றும் பொருளாதார வரலாறும் ஓர் அங்கமாக இருக்கும்.

ரஜினி சார் வில்லன்களுக்கெல்லாம் வில்லன் போல. அதனால் அவரை எதிர்க்க படங்களில் ஒரு வில்லன் போதாது. அதற்கேற்றார் போல் தான் படத்தின் கதையும் உள்ளது.

இந்தப் படத்தில் பெரிய தங்க செயின்கள், காப்புகள் என அணிந்து கொண்டு ஒரு வழக்கமான வில்லன் போல தான் தோன்றுகிறேன். பெரிதாக சொல்லும்படி எதுவும் இல்லை. சென்னை மற்றும் மலேசியாவில் கிட்டத்தட்ட 30 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.

ரஜினி ஒரு சகாப்தம், அவருடன் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. ராதிகா ஆப்தே மிகத் திறமையானவர். தான் நடிக்கும் மொழிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார்”என்றார்.

SCROLL FOR NEXT