நடிகர் விவேக், “சின்ன கலைவாணர்” என்ற பட்டத்தை பயன்படுத்தக் கூடாது என புகார் மனு கொடுத்துள்ளனர்.
குறவஞ்சி, எல்லைக்கோடு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் குலதெய்வம் ராஜகோபால். இவரது மகன் சவுந்தரபாண்டியன் நடிகர் சங்கத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அம்மனுவில், “நடிகர்களுக்கு அவர்களின் நடிப்பு திறமையை பாராட்டி, ரசிகர்கள் சார்பில் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். கடந்த, 1962ல் மதுரையில் நடந்த விழாவில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், அவரது மனைவி மதுரம் மற்றும் எழுத்தாளர் தமிழ்வாணன் ஆகியோரால், என் தந்தை, குலதெய்வம் ராஜகோபாலுக்கு, “சின்ன கலைவாணர்' பட்டம் அளிக்கப்பட்டது. இதை எங்கள் குடும்பத்தினர் மரியாதைக்குரிய பொக்கிஷமாக நினைத்து போற்றி வருகிறோம்.
சிரிப்பு நடிகர் விவேக்கும் சமீபகாலமாக இப்பட்டத்தை பயன்படுத்தி வருகிறார். இதனால், எங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எங்கள் தந்தைக்கு வழங்கிய பட்டத்தை, நடிகர் விவேக் தன் பெயருடன் இணைத்து பயன்படுத்தக் கூடாது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறப்பட்டு இருந்தது.
இப்புகார் குறித்து இருதரப்பிலும் விசாரிக்க, தென்னந்திய நடிகர் சங்கம் முடிவு செய்திருக்கிறது.