’வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்’ படத்தில் சந்தானத்தை கலாய்க்கும் காமெடி வேடத்தில் நடித்திருக்கிறார் ’சோலார் ஸ்டார்’ ராஜகுமாரன்.
'திருமதி தமிழ்' என்ற படத்தின் மூலம் மட்டுமல்லாது, படத்தின் விளம்பரங்கள் மூலமாகவும் பேச வைத்தவர் நடிகர் ராஜகுமாரன். இயக்குநராக இருந்து 'திருமதி தமிழ்' படத்தின் மூலம் நடிகராக வலம் வர ஆரம்பித்தார்.
'திருமதி தமிழ்' படத்தினைத் தொடர்ந்து, அடுத்து இரண்டு படங்களின் கதையை முடித்து விட்டார் என்றும், விரைவில் அவரே நாயகனாக நடித்து இயக்குவார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதில் ஒரு கதை, இதுவரை உலக சினிமாவில் வந்திராத காதல் கதை என்று குறிப்பிடப்பட்டது.
'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தில் பவர் ஸ்டாரை தன்னுடன் நடிக்க வைத்து, அவரை கிண்டல் செய்து காமெடி காட்சிகளை வைத்தார் சந்தானம். தற்போது சந்தானம் நாயகனாக 'வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கில் மாபெரும் வரவேற்பை பெற்ற 'மரியாதை ராமண்ணா' என்ற படத்தின் தமிழ் ரீமேக் இது.
இப்படத்தில் நாயகனான சந்தானத்தை, கிண்டல் செய்யும் காமெடி பாத்திரத்தில் 'சோலார் ஸ்டார்' ராஜகுமாரனை நடிக்க வைத்து இருக்கிறார்கள்.
“காரம் சாப்பிட்டு கண்ணுல தண்ணி வந்து பாத்திருப்ப, கலாய்ச்சுக் கலாய்ச்சே கண்ணுல தண்ணி வந்து பாத்திருக்கியா” இது சந்தானத்தைப் பார்த்து ராஜகுமாரன் பேசும் ஒரு வசனம்.