‘லிங்கா படத்துக்கு தடை கோரிய வழக்கில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் தாக்கல் செய்த பதில் மனுவில் முரண்பாடு இருப்பதாகவும், ரஜினிகாந்த்தின் குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும், தனக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் ‘முல்லைவனம் 999’ படத்தின் இயக்குநர் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லிங்கா’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி, ‘முல்லைவனம் 999’ படத்தின் இயக்குநர் ரவிரத்தினம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். ‘முல்லைவனம் 999’ படத்தின் கதையைத் திருடி, லிங்காவை தயாரித்துள்ளனர் என அவர் தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நடிகர் ரஜினிகாந்த், படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்குமரன் ஆகியோர் தனித் தனியாக பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணையை நவ. 24-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்நிலையில் ரஜினியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து மனுதாரர் ரவிரத்தினம் கூடுதல் பிரமாண பத்திரம் ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ரவிரத்தினம் கூறியிருப்பதாவது:
நடிகர் ரஜினிகாந்த் பதில் மனுவில், படத்தின் கதை, திரைக்கதையை பொன்குமரன் எழுதியதாகக் கூறியுள்ளார். ஆனால், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், கதையை பொன்குமரன் எழுதியதாகவும், திரைக்கதையை தான் எழுதியதாகவும் கூறியுள்ளார். இருவரின் பதில் மனுவில் முரண்பாடு உள்ளது.
ரஜினியின் மகளின் நிறுவனம்தான் ‘லிங்கா’ படத்தின் விநியோகஸ்தர் உரிமையை பெற்றுள்ளது. பொன்குமரன் 2010-ல் கிங் கான் என்ற பெயரில் பதிவு செய்திருந்த கதைதான் ‘லிங்கா’ என ரஜினிகாந்த் கூறியுள்ளார். ‘கிங் கான்’ படம் 2011-ல் வெளியாகிவிட்டது. ‘கிங் கான்’ கதை வேறு, ‘லிங்கா’வின் கதை வேறு. எனது இந்த மனுவை ஏற்று எனக்கு நீதி வழங்க வேண்டும் என மனுவில் ரவிரத்தினம் கூறியுள்ளார்.