திரையரங்கில் படம் பார்க்கும் போதே ட்வீட் செய்பவர்களை நடிகர் சித்தார்த் கடுமையாக சாடியிருக்கிறார்.
தற்போது தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும், திரையரங்கில் இருந்துகொண்டே படம் எப்படி என்பதை ட்வீட் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இன்று வெளியாகி இருக்கும் 'இருமுகன்' படத்துக்கும் காலையில் முதல் ட்வீட்டாளர்கள் விமர்சனம் வந்து கொண்டிருக்கிறது.
இதனை சித்தார்த் கடுமையாக சாடியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பது:
"திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது உங்களால் ட்வீட் செய்ய முடிகிறது என்றால் உங்கள் மூளை சினிமா திரை அல்லது மொபைல் திரை என இரண்டில் ஏதாவது ஒன்றின் மீது மட்டும் கவனம் செலுத்தும். அது சினிமா திரையாக இருக்கலாம் அல்லது உங்களது மொபைல் திரையாக இருக்கலாம். மொபைல் வழியாக சில தகவல்களை தெரிவித்துவிட்டு உங்களை நீங்களே பெரிய விமர்சகராக விளம்பரபடுத்திக் கொள்கிறீர்கள்.
ஒரு படத்தை பார்த்து முடித்தவுடன் விமர்சனம் செய்யுங்கள் அதை வரவேற்கிறோம். ஆனால், படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே விமர்சனங்களை ட்வீட் செய்வது தகுமோ? இத்தகைய விமர்சனங்கள் திருட்டு டிவிடிக்களைப் போலவே சட்டவிரோதமானது.
ஒரு திரைப்படம் உருவாக உழைப்பை செலுத்தும் ஒவ்வொரு நபருக்கும் செய்யும் அவமரியாதை. ஒரு திரைப்படம் பிடித்திருந்தால் கொண்டாடுங்கள், பிடிக்காவிட்டால் அதை அப்படியே வெளிப்படையாக தெரிவியுங்கள். அதை விடுத்து இந்தப் படத்தை பார்க்கலாமா, வேண்டாமா என சிபாரிசு செய்யாதீர்கள். இது மிகவும் கீழ்த்தரமானது. இதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
இனி அடுத்த முறை திரையரங்குக்குள் யாரேனும் செல்போன் பயன்படுத்திக் கொண்டிருப்பதை பார்த்தால் அவரை கண்டியுங்கள். ஏனெனில் இருள் சூழ்ந்த அரங்கில் படம் பார்க்கவே நீங்கள் பணம் செலவழித்திருக்கிறீர்கள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் நடிகர் சித்தார்த்.