தமிழ் சினிமா

கார் ரேஸ் காதலன் அஜித்: இதோ இன்னோர் உதாரணம்

ஸ்கிரீனன்

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது கோயம்புத்தூரில் இப்படத்திற்காக சண்டைக் காட்சிகளை வடிவமைத்து வருகிறார்கள்.

சண்டைப் பயிற்சி இயக்குநர் லீ விட்டேகர் மேற்பார்வையில் கார் சேஸிங் காட்சிகளை காட்சிப்படுத்தி வருகிறார்கள். அப்போது படக்குழு நடிகர் அஜித்தின் உதவியை நாட, அவரோ நரேன் கார்த்திகேயன் உதவியுடன் காட்சிகள் சிறப்பாக அமைய வழிவகுத்துள்ளார்.

இது குறித்து படத்தின் இயக்குநர் விஜய் மில்டனிடம் கேட்டபோது, "கார் சேஸிங் காட்சியில் விக்ரம் நடித்து வரும் கார், புரண்டு சறுக்கிக் கொண்டு போவது போல காட்சிப்படுத்த வேண்டும். படத்தின் சண்டைக்காட்சி இயக்குநர் லீ விட்டேகர் இக்காட்சியினை காட்சிப்படுத்த அஜித்திடம் ஆலோசனைகள் கேட்கலாம் என்று போன் செய்திருக்கிறார். 'ஆரம்பம்' படத்தின் சண்டைக் காட்சிகளை காட்சிப்படுத்தியதால் ஏற்பட்ட பழக்கத்தில் அஜித்திடம் பேசினார்.

அவரோ இக்காட்சிக்கு என்னைவிட, நரேன் கார்த்திகேயனிடம் கேளுங்கள். அவருடைய உதவி சரியாக இருக்கும். என்னை விட அவருக்கு நிறைய விஷயங்கள் தெரியும் என்று கூறினார்.

அஜித் பரிந்துரைத்ததன் பேரில் நரேனிடம் பேச முடிந்தது. அவரும் சம்மதம் தெரிவித்து, கோயம்புத்தூரில் நடைபெற்ற விவாதத்தில் நேரடியாக கலந்து கொண்டு எங்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார்." என்றார்.

SCROLL FOR NEXT