தமிழ் சினிமா

நினைவுகள்: டாக்டர் மனோகரன் - எம்.ஜி.ஆர். நினைத்தது நடந்திருந்தால்....?

செய்திப்பிரிவு

எம்.ஜி.ஆர். இறந்து கிட்டத்தட்டக் கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரைப் பற்றிய செய்திகள் காற்றில் உலவிக்கொண்டேயிருக்கும். திரையுலகத்திலும் அரசியல் உலகத்திலும் எம்.ஜி.ஆரின் நினைவுகள் வற்றாத நதியாக இன்னும் ஓடிக்கொண்டிருப்பதைப்போல மருத்துவ உலகத்திலும் அவரது மாண்பைப் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் டாக்டர் மனோகரன். எம்.ஜி.ஆரைப் பற்றி உலகமே பேசிக் கொண்டிருக்க, அவர் பேசாத நாட்களில் அவருக்குப் பேச்சுப் பயிற்சி அளித்தவர் இவர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுச் சென்னை திரும்பியதிலிருந்து இறுதிக் காலம்வரை அவரோடு இருந்தவர். எம்.ஜி.ஆர். பற்றிய தன்னுடைய மறக்க முடியாத நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

நீங்கள் எப்படி எம்.ஜி.ஆருக்கு அறிமுகமானீர்கள்?

எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய பிறகும்கூட அவரால் சரியாகப் பேச முடியவில்லை. அவருக்குப் பேச்சு பயிற்சி அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். அப்போதிருந்த ஹெல்த் மினிஸ்டர், ஹெல்த் செகரட்டரி, டி.எம்.இ. ஆகியோர், அரசு பொது மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த என்னைத் தேர்வு செய்தார்கள். எம்.ஜி.ஆருக்குப் பேச்சுப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று என்னை அவர்கள் அழைத்தபோது நான் தயங்கினேன். ஏனென்றால், என் குடும்பம் பெரியது. நான் ஒருவன்தான் சம்பாதிப்பவன். காலையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிவிட்டு மாலையில் தனியாகக் கிளினிக் வைத்திருந்தேன். அந்தத் தொழில் பாதிக்குமே என்பதுதான் என் தயக்கம்.

சரியான ஆள் நீதான் என்று என்னைக் கொண்டுபோய் எம்.ஜி.ஆர். முன் நிறுத்திவிட்டார்கள். ஒருமுறை என்னை அளவெடுப்பது போலப் பார்த்தார். எவ்வளவு வேணும் என்று சைகையிலேயே கேட்டார். நான், ‘ஐயா... நான் அரசு ஊழியன். அங்குக் கொடுக்கிற சம்பளமே போதும்’ என்றேன். தினமும் காலை ஆறு மணிக்கெல்லாம் நான் ராமாவரம் தோட்டத்திற்குப் போய்விட வேண்டும். இரவு பத்து மணிவரை அவரோடு இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய பணி. காலையில் நாலு மணிக்கே எழுந்து என்னைத் தயார்படுத்திக்கொண்டால்தான் ஆறு மணிக்காவது அங்குப் போக முடியும். எனக்கென ஒரு அரசு காரையும் டிரைவரையும் தனியாகவே தந்துவிட்டார்கள்.

ஆறு மணிக்கெல்லாம் அவரும் தயாராக இருப்பார். ஒன்பது மணி வரையிலும் அவருக்கு ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிக் கொடுப்பேன். பயிற்சியை அசுர வேகத்தில் பழகிக்கொண்டார். சில வார்த்தைகளைச் சொல்ல முடியா மல் கஷ்டப்படும்போதுகூடப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்ட தில்லை. சிரமப்பட்டுப் பேசிவிடுவார். ஒன்பது மணிக்குப் பிறகு அவர் காரிலேயே நானும் கோட்டைக்குச் செல்வேன். முன் சீட்டில் நான் அமர்ந்துகொள்ள அவர் பின் சீட்டில் அமர்வார்.

கோட்டையில் அவரது அறையிலேயே எனக்கும் ஒரு சேர் போடப்பட்டிருக்கும். அவர் அருகிலேயே அமர்ந்திருப்பேன். அவர் பேசுவது புரியாவிட்டால் அதை நான் விளக்க வேண்டியிருந்தது.

அவருடன் இருந்து சேவை செய்த அந்தச் சில வாரங்களில் என்னுடைய செயல்பாடுகள் பற்றியும், நான் எந்த விஷயத்தையும் வெளியில் பகிர்ந்து கொள்வதில்லை என்கிற தகவலும் அவருக்குப் போயிருக்க வேண்டும். என்னை ஒரு மகன் போலப் பார்க்க ஆரம்பித்தார். சில விவாதங்களின்போது நான் சொல்கிற கருத்தை ஏற்றுக்கொள்கிற அளவுக்கு அவருடைய மனதில் எனக்கும் இடம் இருந்தது.

மறக்க முடியாத ஏதேனும் ஒரு சம்பவம்?

ஒருமுறை கோவைக்குச் சென்றிருந் தோம். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். விமானத்தில்தான் சென்றோம். எனக்கு அது முதல் விமானப் பயணம். சற்றே அச்சத்தோடு ஏறினேன். பெரிய பெரிய அமைச்சர்கள் எல்லாரும் அந்தப் பிளைட்டில் இருக்க, என்னை அவர் அருகில் உட்கார வைத்துக் கொண்டார். சீட் பெல்ட்டை அவரே மாட்டிவிட்டார். ஜூஸ் வந்தது. ஒரு கிளாசை அவரே தன் கையால் எடுத்து என்னிடம் கொடுத்து ‘குடிங்க’ என்றதை என்னால் இப்போதும் மறக்க முடியாது. பக்கத்தில்தான் அவர் பிறந்த ஊரான பாலக்காடும் இருந்தது. மூன்றாவது நாள் அங்குக் கிளம்புகிற நேரம். எனக்குத் திடீரெனக் காய்ச்சல் வந்துவிட்டது. நான் படுத்துவிட்டேன்.

நான் வராததைக் கவனித்த எம்.ஜி.ஆர், ‘மனோகரன் வரலயா?’ என்றாராம். அவர்கள் எனக்கு உடம்பு சரியில்லாத தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். பாலக்காட்டிலிருந்து திரும்பியதும் என்னைப் பார்க்க வந்துவிட்டார். நான் அவர் வருவது தெரியாமல் படுத்திருந்தேன். திடீரென்று யாரோ பக்கத்தில் நிற்கிற உணர்வு. திரும்பிப் பார்ப்பதற்குள் அவர் என் கன்னத்தில் கை வைத்து, ‘ஆமாம்.. ரொம்ப காய்ச்சலா இருக்கே’ என்று கூறியவர், ‘உடம்ப பார்த்துக்கங்க’ என்று கூறிவிட்டுப் பக்கத்தில் அவருக்காக நியமிக்கப்பட்டிருந்த மருத்துவக் குழுவிடம், ‘மனோகரனை கவனிச்சுக்கங்க’ என்று கூறிவிட்டுக் கிளம்பினார். நான் உருகிப் போனேன்.

அப்போது அவர் பொதுக்கூட்டங்களில் பேசிவந்தாரே?

ஆமாம்... அந்தப் பேச்சை நான்தான் தயார் செய்வேன். எந்தெந்த வார்த்தைகளை எளிதாக அவரால் பேச முடியுமோ, அதை மட்டுமே வைத்துப் பேச்சைத் தயார் செய்வது என் வேலை. அமெரிக்காவிலிருந்து வந்த பின்பு எம்.ஜி.ஆர் கலந்துகொண்ட முதல் மீட்டிங் ஜேப்பியார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த மீட்டிங்தான். நான் எழுதி வைத்திருந்த பேச்சை அவர் பலமுறை பயிற்சி எடுத்துக்கொண்டார். மிகச் சிறப்பாகப் பேசியும் முடித்தார். மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற விழாவிலும் நிறைவாகப் பேசினார். அந்த விழாவில்தான் இப்போதைய முதல்வரம்மாவுக்கு செங்கோல் பரிசளித்து, தனது வாரிசு அவர்தான் என்பதையும் உணர்த்தினார் எம்.ஜி.ஆர்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த செய்தி ஏதாவது?

அதைப்பற்றி நான் அதிகம் சொல்லக்கூடாது. பட்... சில விஷயங்களை பகிர்ந்துக்கலாம். 87ஆம் வருஷம் மீண்டும் நியூயார்க் போயிருந்தார் எம்.ஜி.ஆர். மறு சோதனைக்கான ட்ரிப் அது. வழக்கம்போல நான், ஹெல்த் செகரட்ரின்னு ஒரு மருத்துவக் குழுவே கிளம்பினோம். அங்கிருந்தபடியே இங்குள்ள அரசியல் மற்றும் சட்டம் ஒழுங்கையும் கவனிச்சார் எம்.ஜி.ஆர். அப்போதான் இலங்கை தொடர்பான சில முடிவுகளை அவர் எடுத்திருந்தார். அதுமட்டும் அவர் நினைத்த மாதிரி அமைஞ்சிருந்தா பிரபாகரன் பற்றி நாம் இப்போ கேள்விப்படுகிற விஷயமும், தற்போது நடந்த துயரச் சம்பவங்களும் நடக்காமல் போயிருக்கும். ம்... என்ன செய்வது?

SCROLL FOR NEXT