தமிழ் சினிமா

சினிமாவைக் கெடுப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள்தான்: ஆர்.கே.செல்வமணி

மகராசன் மோகன்

சினிமாத் துறையை கெடுப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் என்று இயக்குநர் சங்கச் செயலாளரும், திரைப்பட இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி பேசியுள்ளார்.

டி.சூர்ய பிரபாகர் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், நீலம் உபாத்யாயா நடிப்பில் தயாராகி வரும் ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தின் இசை வெளி யீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

இந்தவிழாவில் இயக்குநர் சங்கத்தலைவர் விக்ரமன், அதன் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர்கள் எஸ்.ஜே.சூர்யா, எம்.ராஜேஷ், பாடலாசிரியர் நா.முத்து குமார், நடிகர்கள் ஸ்ரீகாந்த், பரத், நாயகி நீலம் உபாத்யாயா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஆர்.கே செல்வமணி பேசியதாவது: படத்தின் தயாரிப்பாளர் அருமைச்சந்திரன் இந்நிகழ்ச்சியில் பேசும் போது திரைத்துறையில் நடக்கும் ஏமாற்றங்களையும், நம்பிக்கை யில்லாத நிகழ்வுகளையும் சந்திக்க நேரிடுவதைப் பற்றி எடுத்து ரைத்தார். ஏமாற்றுவதைப் போல ஏமாறுவதும் குற்றம்தான். மேலும் அவர் பேசும்போது கார்ப்பரேட் நிறுவனம் போல செயல்படலாம் என்றும் கூறினார். தயவு செய்து அதுபோல் ஆகிவிட வேண்டாம். இன்றைக்கு சினிமாவை கெடுப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள்தான்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமில்லை. நல்ல திரைப்படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களோடு கார்ப்பரேட் நிறுவனங்களாக மாறி சினிமா எடுப்பவர்களை இணைத்து பேச வேண்டாம். ஒரு நடிகரையோ, இசை அமைப்பாளரையோ அழைத்து உங்களுக்கு 50 லட்சம் கொடுத்துவிடுகிறோம். உங்கள் பெயரைச்சொல்லி நாங்கள் எவ்வளவு வாங்குகிறோம் என்பது பற்றி நீங்கள் கண்டுகொள்ள வேண்டாம் என்று கார்ப்பரேட் நிறுவனங்கள் சொல்லி வருகிறது. இதை திரைத் துறையினரும் வெளியே சொல்வதிஇல்லை.

சினிமாவில் யார் ஒருவன் தப்பு செய்தாலும் அது ஒட்டுமொத்த சினிமா உலகத்தையும் பாதிக்கிறது. இனியும் அது தொடர்ந்தால், அப்படி தொடர்வது இயக்குநர் சங்கத்தின் பார்வைக்கு வந்தால் சம்பந்தப்பட்டவர்களை அடிப்படை உறுப்பினர் இல்லை என்றே நீக்கிவிடுவோம். இந்தத் திரைப்படம் உருவாகத்தொடங்கிய ஆரம்பம் முதலே எனக்குத் தெரியும். சிறப்பாக வந்துள்ள தாக கேள்விப்பட்டேன். படக்குழு வினருக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT